புத்தக விமர்சனம்மோடி @ 20 நனவாகும் கனவுகள்

ப்ளூ கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்
தமிழில்.  மீரா  ரவிசங்கர்

கடந்த 2022ம் ஆண்டு மே மாதம், வெளியிடப்பட்ட இந்த புத்தகம் , குஜராத் முதல்வர் எனத் துவங்கி எந்த இடர்பாடும் இல்லாமல் பிரதமராக உருவெடுத்து, தொடர்ந்து 20 ஆண்டுகள் முதன்மை நபராக இருந்து தனது கனவுகளை மோடி எப்படி மெய்பித்து வருகிறார் என்பதை சொல்கிறது.  இந்தியாவின் முக்கியப் பிரமுகர்கள் பார்வையில் மோடி எவ்வாறு திகழ்கிறார் என்பதை விளக்கும் இந்நூல் பற்றிய சிறிய விமர்சனம் இக்கட்டுரை.’ஒரு மரத்தில் உள்ள பழங்களை எண்ணி விடலாம். ஆனால் ஒரு பழத்தில் உள்ள மரங்களை எண்ண முடியாது’ என்பது அயல்நாட்டுப் பழமொழி. ஒரு பழத்தின் உள்ளிருக்கும்  விதைகளில் இருந்து பல மரங்கள் உண்டாகும்.‌  அடுத்த சுற்றில் அந்த மரங்களில் உள்ள பழங்களில் இருந்து மரங்கள் உண்டாகும். இதுதான் இயற்கை எனும் படைப்புலகத்தின் ராட்சச ரகசியம்.
நரேந்திர தாஸ் தாமோதர தாஸ் மோடி என்கிற நமது பிரதமரை காணொளிகளில் அடிக்கடி பார்க்கிறோம்;  சில சமயம் கேட்கிறோம்; தவறாமல் காலரை தூக்கி விட்டுக் கொள்கிறோம். ஆனால் யார் இந்த மோடி. பழத்திற்குள் மரங்கள் போல மோடிக்குள் எத்தனை மோடிகள் உண்டு என்பதை அறியும்  முயற்சிதான் இந்தப் புத்தகம்.  இந்தத் தொகுப்பு நூல் பெருமளவில் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.
அழைப்பு வந்தது:
2001 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமராக இருந்த திரு அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களிடம் இருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பு மோடியின் வாழ்க்கையை மாற்றியதோடு அல்லாமல் இந்திய அரசியலின் அடையாளத்தை என்றென்றைக்குமாக மாற்றிவிட்டது.  2001‌ஆம் ஆண்டில் மாநிலத்தின் ஆட்சியை கையில் எடுத்தார் மோடி.‌  பிறகு குஜராத் மாநிலத்தை நீண்ட காலத்துக்கு ஆண்ட முதலமைச்சர் என்ற பெயரைப் பெற்றார். வரலாறு காணாத வெற்றி வளர்ச்சியை 2014இல் தேசிய அரசியலில் தேர்ந்தெடுக்கப்படும் வரை குஜராத் கண்டது.  அவர் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த காலம் எளிதானதல்ல. ஓடிக்கொண்டே நற்பெயரை பெற்றார். வலுவான வேர்கள்தான்  இனிப்பான பழங்களைத் தரும்.  அவ்வளவு ஆண்டுகள் மக்கள் பணியாற்றியதில் அவர்களைப் புரிந்து நடக்கும் பண்பைக் கற்று இருந்தார். நிர்வாகத்தின் சிகப்பு நாடா நிலையை தகர்க்க முயற்சிகள் எடுத்தார். செயல்முறைகளை எளிதாக்கி பூகம்பத்தினால் கட்ச் பகுதியில் ஏற்பட்ட அழிவுகளைப் புனரமைக்கப் பாடுபட்டார். அனைத்தையும் இழந்த அம்மக்களுடன் தீபாவளி இரவை கழித்தார். பயனற்ற செலவுகளைக் குறைத்தார் .  முதல் முறையாக சிக்கனம் என்பதை அரசாங்கத்தில் புகுத்தினார்.‌‌ அவர் எடுத்துக்காட்டாக நடந்து கொண்டார். கூர்ந்து கேட்டார்.  துரிதமாகக் கற்றுக் கொண்டார்.
அற்புதம்:
பேட்மிட்டன் வீராங்கனை பி.வி சிந்து தன்னுடைய பதிவில் ‌பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்தது மற்றும் பிரதமர் தம்முடன் பகிர்ந்தது ‌‌ குறித்து விளக்குகிறார்.  அதாவது 1970களில் குஜராத்தில் மச்சு அணை உடைந்த பொழுது மோர்பி  நகரம் வெள்ளத்தினால் சூழ்ந்தது.   அது தொழிற்சாலை நிறைந்த நகரம், வேலை,  மக்கள் வாழ்வாதாரம் என்று அனைத்தும் பாழானது.   இந்த பேரிடரை மோடி ஒரு இளம் ஸ்வயம்சேவக்காகப் பார்வையிட்டார்.  மக்களோடு மக்களாகக் களப்பணி செய்யும் வாய்ப்பையும் பெற்றார்.  அங்கேயே முகாமிட்டு தங்கினார். நகரம் ஆழ்ந்த துயரில் மூழ்கி நம்பிக்கை இழந்திருந்தது. ஆனால் அந்த இளம் வயதில் மோடி சுய நம்பிக்கையை இழக்காதவர்.  மக்களை ஒன்று திரட்டி ஒரு அற்புதமான விஷயம் செய்தார். மோர்பி நகர மக்களுக்கு உருக்கமான கடிதம் எழுதினார்.
‘இது உங்கள் நகரம். இந்த பேரிடருக்குப் பின் இதைச் சீராக்கும் பொறுப்பு உங்கள் கையில் உள்ளது’ என்று வீட்டுக்கு வீடு சென்று தாமே இந்த கடிதத்தை சேர்த்தார். தற்காலத்தில் நமக்கு மோடியின் வார்த்தைகளின் வசீகரம் தெரியும். ஆனால் அந்தக் காலத்திலேயே அவர் ஆகர்ஷ்ண சக்தியைப் பெற்றிருந்தார். இளைஞர்கள் அனைவரும் நகரத்தை சீர் செய்ய,  திரும்பவும் நிறுவ, ஆயத்தமானார்கள். இப்படி மக்களின் சக்தியை திரட்டிய அவர் பேராற்றலைப் பாராட்டி அப்போதைய வெள்ள நிவாரண பொறுப்பிலிருந்த ஐஏஎஸ் அதிகாரி ஹெச் கே கான் என்பவர் இளம் மோடியின் முயற்சிகளைப் பெரிதும் பாராட்டினார். அவர்கள் மீது நம்பிக்கை வைத்து செயல்முறை திட்டங்களில் இணைக்க வேண்டும். அப்போதுதான் இளைஞர்கள் கொண்டுவரும் வியத்தகு மாற்றங்களை நாம் கண்கூடாகக் காண முடியும் என்பதை நான் அந்த இளம் வயதிலேயே உணர்ந்து கொண்டேன் என்றார். மோடி இன்று வரை தன்னுடன் எடுத்துச் செல்லும் பாடமும் இதுவே என்றார்.
பெண்கள் நாட்டின் கண்கள்:
ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் அடிக்கல்லாக விளங்குவது கல்வி.
அதுவும் பெண் கல்வி தான் .‌‌பெண்கள் கல்வியின் துணையுடனே சரியானத் தீர்மானங்களை எடுக்கிறார்கள். தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது. அவர்களின் சம்பாதிக்கும் திறனும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.  அவர்களின் கல்வி பாலியல் வன்முறையைக் குறைக்கிறது. பாலின பாகுபாட்டுக்கும் ஒரு முடிவும் கட்டுகிறது. குஜராத் மாநிலத்தில் மட்டுமல்லாமல் இந்திய நாடு முழுவதிலும் பெண்கல்விக்கு மோடிஜியின் சேவையும் உழைப்பும் அதிகம். கொள்கைகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி அவற்றை செயலாக்குவதிலும் மோடிஜியின் உத்வேகமும் களப்பணியும் தெளிவாகத் தெரிகிறது.‌ திட்டங்கள் அமலாக்கப்பட்டு 9 ஆண்டுகளுக்குப் பின் குஜராத்தில் ஜூன் 2011ல் மூன்று நாட்களுக்கு சுழல் பயணம் மேற்கொண்டார் அப்போதைய முதல்வர் மோடி. முதலமைச்சருடன் பல அமைச்சர்கள் செயலாளர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் மக்கள் தலைவர்கள் கொண்ட குழு 18 ஆயிரம் கிராமங்களுக்குச் சென்று பார்வையிட்டது.   151 நகராட்சிகள் எட்டு நகராட்சி மன்றங்களில் உள்ள பள்ளிகளையும் பார்வையிட்டு திட்டத்துக்கு ஊக்கம் அளித்தார் அப்போதைய முதல்வர் மோடி. அது மட்டுமல்ல பிரதமராக பதவி ஏற்பதற்கு முன் குஜராத்தில் இருந்து புறப்படும் பொழுது ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் எனக் கருதி தனது தனி சேமிப்பிலிருந்து 21 லட்சம் ரூபாய் பணத்தை நன்கொடையாக கொடுத்தார் .  இதை ஒரு காப்பீட்டுத் தொகையாக நிறுவி குஜராத் அரசாங்கத்தில் வேலை செய்யும் ஓட்டுநர்கள் மற்றும் பியூன்களின் மகள்களின் படிப்புச் செலவுக்காக ஒதுக்கினார்.
தொழில்நுட்பம் அரசு கருவியாக:
நந்தன் நீல்கேணி  தன்னுடைய பதிவில் எழுதுவது “மோடிஜி சமூக ஆர்வலராக வாழ்க்கை பயணத்தை தொடங்கிய போதும் குஜராத் முதலமைச்சர் ஆனபோதும், இன்று இந்தியாவின் உச்சபட்ச அரசியல் பதவியில் இருக்கும்போதும் புரிந்து கொண்ட விஷயம் தொழில்நுட்பம் தான் இந்தியாவை முன்னிறுத்தி செல்லும் என்பதாகும். அரசாங்க அமைப்புகளை துரிதப்படுத்தும் என்று ஒரு ஆழ்ந்தப் புரிதலுடன் பிரதமர் தொழில்நுட்பத்தை அணுகுகிறார்.
மேலும் திரு. நந்தன் நீல்கேணி  அவர்கள் அப்போதைய புதிய பிரதமரான மோடிஜியுடன் 2014ல் நிகழ்ந்த ஒரு சந்திப்பு குறித்தும் பதிவு செய்கிறார்.   தான் எதிரணிக்காகப் போட்டியிட்டு தோற்றவன் என்ற நிலையிலும்  பிரதமர் மோடியை தான் சந்திக்க சென்றபோது பிரதமர் மோடி தன்னை மிகவும் மரியாதையாக நடத்தினார் என்றும் சொல்வதை பொறுமையாக கேட்டார் என்றும் கூறுகிறார்.   அவரது கேள்விகள் இந்திய மக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவது பற்றியே இருந்தன. இந்தியாவின் நிதி நிலைமை எப்படி மாறும்?  நேரடி பணப் பரிமாற்றங்கள் நடந்தால் அது எப்படி லஞ்சத்தைக் குறைக்கும் என்பதை பற்றி பேசினார்  பிரதமர் மோடி‌.  தேச நலனுக்குத் தேவையானதை பற்றி அறிந்து கொள்ள அவர் திறந்த மனதுடன் அணுகியது தன்னைப் பிரமிக்க வைத்தது‌ என்கிறார் திரு நந்தன் நீல்கேணி.
தகவல் தொழில்நுட்பத்தை வெவ்வேறு விஷயத்தில் உபயோகிக்கும் பிரதமர் மோடி மன் கீ பாத், மனதின் குரல்  என மறந்தே போய்விட்ட வானொலியின் மூலம் இந்திய குடிமக்களிடம் மாதா மாதம் தொடர்பு கொள்கிறார்.  இதன் மூலம் வானொலியைப் பிரபலப்படுத்தி விட்டார்.   முரணாக இன்று இந்த புதிய உலகத்தில் செவி வழி ஊடகத்துக்கு அற்புதமான விஷயத்தை செய்து விட்டார் என்கிறார் திரு.‌ நீல்கேணி.
இந்நூலில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பி.வி.சிந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்போசிஸ் சுதா மூர்த்தி, என்.ஐ.ஏ இயக்குநர் அஜித் தோவல், உட்பட 22 முக்கிய பிரமுகர்கள் மோடியின் 20 ஆண்டு தொடர் வெற்றி பற்றி தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
இந்நூலை அருமையாக மொழிபெயர்ப்பு செய்து தமிழர்களுக்கு அவர்கள் பாஷையில் கொடுத்து என்ன பிரயோஜனம் என்ற கேள்வி எழுந்து வாட்டுகிறது.   மோடி அரசின் நலத்திட்டங்களின் பயனாளிகள் என்றும் எடுத்துக் கொண்டால் தமிழர்கள்தான் முன்னணியில் இருக்கிறார்கள். மசூதிக்கு அருகில் இருப்பவன் தான் தொழுகைக்கு கடைசியாக வருகிறான் என்பது அரேபிய பழமொழி.

சுப்பு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top