அமைச்சரை நீக்க எனக்கு அதிகாரம் உண்டு – ஆளுநர் அதிரடி

அரசியலமைப்பு சட்டத்தின் 154, 163, 164-வது பிரிவுகளின்கீழ் அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி 5 பக்க கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பான நடவடிக்கைக்காக மத்திய அட்டர்னி ஜெனரலை அணுகியுள்ளதால், இந்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சரவையில் இருந்துசெந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் 29.06.2023 அன்று உத்தரவிட்டார். இதுதொடர்பாக 5 பக்க கடிதத்தை முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பண மோசடி, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்குகள் இருப்பதாலும், அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தன்னை பாதுகாத்துக் கொள்வதாகவும் உச்ச நீதிமன்றம் மே 16-ம்தேதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இதனால், அவருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகள் நிலுவையில் இருப்பதை குறிப்பிட்டு அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று கடந்த மே 31-ம் தேதி தங்களுக்கு எழுதிய கடிதத்தில் பரிந்துரைத்தேன். ஆனால், என் ஆலோசனையில் இருந்த நியாயத்தை ஏற்காமல், கடந்த ஜூன் 1-ம் தேதி கோபமான வார்த்தைகளை கொண்ட பதில் கடிதம் அனுப்பி இருந்தீர்கள்.

ஜூன் 15-ம் தேதி நீங்கள் எனக்கு எழுதிய கடிதத்தில், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதை குறிப்பிட்டு, அவர் கவனித்த துறைகளை மற்ற அமைச்சர்களுக்கு மாற்ற பரிந்துரைத்தீர்கள். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்றும் கூறியிருந்தீர்கள்.

ஆனால், அவர் ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதையும், மருத்துவமனையில் நீதிமன்றக் காவலில் சிகிச்சை பெற்றதையும் குறிப்பிடவில்லை. எனவேதான், அன்றே உண்மையான காரணத்தை கேட்டு கடிதம் எழுதினேன்.

ஆனால், நான் கேட்ட விவரங்களை நீங்கள் தர மறுத்ததுடன், ஜூன் 16-ம் தேதி, தகாத வார்த்தைகளை கொண்ட கடிதத்தை அனுப்பியதுடன், ஜூன் 15-ம்தேதி அனுப்பிய கடிதத்தின் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்குமாறு என்னை வலியுறுத்தினீர்கள். ஆனால், நியாயமான விசாரணை நடக்க வேண்டும் என்பதால், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை நான் ஏற்கவில்லை.

எனக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க மறுத்ததுடன், இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என அறிவிக்கை வெளியிட்டீர்கள்.

செந்தில் பாலாஜி நடத்தை தொடர்பாக உச்ச நீதிமன்றம் சில கருத்துகளைதெரிவித்துள்ளது. உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு, அவர் வேறு ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது தொடரப்பட்டது. இதை அரசியல் பழிவாங்கல் என்று கூறஇயலாது. புதிய ஆட்சியில் அவர் மீண்டும் அமைச்சர் ஆகாமல் இருந்திருந்தால், 2021 ஜூலை மாதம் புகார்தாரர்கள் சமரசம் செய்திருப்பார்களா என்பது தெரியாது.

நேர்மையான விசாரணைக்கு செந்தில் பாலாஜி இடையூறு விளைவிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும், அமைச்சராக வைத்திருந்தீர்கள். இது, சிபிஐ, வருமான வரித் துறையை தடுத்து மிரட்டும் தைரியத்தை அவருக்கு அளித்தது.

எனது அறிவுரையையும் மீறி அவரை பதவியில் நீடிக்க வைக்க வேண்டும் என்று வலியுறுத்துவது உங்கள் பாரபட்சத்தை காட்டுகிறது. அவர் அமைச்சராக நீடிப்பது, சட்ட நடைமுறைகளுக்கு இடையூறு ஏற்படுத்துமோ என்ற நியாயமான அச்சம் ஏற்படுகிறது. இந்த சூழலில், அரசியலமைப்பு சட்டத்தின் 154, 163, 164-வது பிரிவுகளின்கீழ் அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது. அதன்படி, வி.செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குகிறேன்.

இவ்வாறு ஆளுநர் தெரிவித்துள்ளார். பின்னர், செந்தில் பாலாஜி அமைச்சரவை சம்மந்தமான நடவடிக்கை தொடர்பாக  மத்திய அட்டர்னி ஜெனரலை அணுகியுள்ளதால், இந்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளதாக முதல்வருக்கு இன்னொரு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், திமுக எதிர்கட்சியாக இருந்த போது ஸ்டாலின் தான் அன்றைய அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். என மனுக் கொடுத்ததும், டிவிட் செய்ததும் தறபோவது வைராலாக பரவி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top