பத்திரிகை பேட்டியை கூட ஒழுங்காக படிக்காமல் பிதற்றுகிறார் ஜெயக்குமார் – கரு.நாகராஜன் கண்டனம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தவறாக விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார்.  இதில் அ.தி.மு.க ஊழல் பற்றிய கேள்வி ஒன்றிற்கு யதார்த்தமான உண்மையை பதிலாகக் கூறி இருந்தார்.  இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில், ஜெயக்குமாரின் பேச்சு வரம்பு மீறிய ஒன்று என தமிழக பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் அதனைக் கடுமையாக கண்டித்துள்ளார்.

இது சம்மந்தமாக 12.06.2023 அன்று வெளியிட்ட அறிக்கையில், தெரிவித்திருந்ததாவது: “பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு.கே.அண்ணாமலை அவர்களை பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவது மிசுவும் கண்டிக்கத்தக்கது. ஒரு ஆங்கில பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியை கூட ஒழுங்காக படிக்காமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார்.

தினந்தோறும் பேட்டி கொடுப்பது அவருக்கு பொழுதுபோக்காக இருக்கிறது; எங்கள் மாநிலதலைவர் அவர்களைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் கிடையாது. எங்கள் தலைவர் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதில் தொடக்கத்தில் இருந்தே உறுதியாக இருக்கிறார், தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்று தொடர்ந்து கூறி வருகிறார். தமிழக மக்களின் நலனுக்காக, மாநிலத்தின் வளர்ச்சிக்காக சிஸ்டத்தை சரிசெய்திட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார். அவர் என்றுமே உள்ளதை உள்ளபடி பேசுபவர் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.

பதவிக்கும், பவிசுக்கும் ஆசைப்பட்டு திருஅண்ணாமலை அவர்கள் அரசியலுக்கு வரவில்லை.  பல்வேறு புதிய திட்டங்களோடு மக்கள் வாழ்வு வனம் பெறும் கனவுகளோடு அரசியலுக்கு வந்திருக்கும் அவர் என்றும் மாறப் போவதில்லை. ஜெயக்குமார் போன்று அரசியல்வாதிகள் தான் தங்களை நேர்வழிக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஜெயக்குமார் அவர்கள் நுனி மரக்கிளையில் அமர்ந்து கொண்டு கிளையின் அடிப்பகுதியை வெட்டிக் கொண்டு இருக்கிறார். இது போன்ற பேட்டிகளால் பாதிப்பு உங்களுக்குத் தான். உலகின் பெரிய அரசியல் இயக்கத்தை, 19 கோடி உறுப்பினர்களை கொண்ட இயக்கத்தை செடி என்கிறார், என்ன நிலையில் இருந்து பேசுகிறார் என்று புரியவில்லை.

தென்சென்னை பாராளுமன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் நேற்று (11.06.2023) திரு.அமித்ஷா அவர்கள் கலந்து கொண்டது கூட ஜெயக்குமார் அவர்களுக்கு விரக்தியை தந்திருக்கும் என்று கருதுகின்றேன். எங்கே தன் மகன் ஜெயவர்தன் போட்டியிட விரும்பும் தொகுதி பறிபோய் விடுமோ என்று கலங்கிப் போயிருப்பார்,

கூட்டணி என்பது எல்லோரும் இணைந்தது தான், இதில் பெரியண்ணன் வேலை யாருக்கும் கிடையாது.

எனவே எங்கள் மாநிலத் தலைவர் திரு.அண்ணாமலை அவர்களின் ஆங்கிலப் பத்திரிகை பேட்டியை திசை திருப்பி குழப்பம் செய்திட வேண்டாம் என்று தெரிவித்துக்கொள்கின்றேன்”. என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு உண்மையை இயல்பாக சொல்வதற்கு நோக்கம் கற்பித்து அதிமுக அரசியல் செய்வது தான் கூட்டணி தர்மத்திற்கு எதிரானது என முக்கிய அரசியல் பிரமுகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top