அனைத்து நாடுகளுடனும்  சுமூகமான உறவையே இந்தியா விரும்புகிறது – ஜெய்சங்கர் !

அனைவருடனும் சுமூகமான உறவையே இந்தியா விரும்புகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

சைப்ரஸ் சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிகோசியா நகரில் அங்கு வசிக்கும் இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது, அவர்  பேசியதாவது: பயங்கரவாதத்தின் மூலமாக யாரும் இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது. அதனை நாம் ஏற்று கொள்ளவும் மாட்டோம். இந்தியா அனைவருடனும் சுமூகமான உறவை பேணுவதற்கே விரும்புகிறது. சுமூகமான உறவு என்பதற்காக மன்னித்து கொண்டே இருப்பது அல்லது விலகி நின்று பயங்கரவாதத்தை வேடிக்கை பார்ப்பது என்று அர்த்தம் கிடையாது. இதில் இந்தியா தெளிவாக உள்ளது.

கோவிட் காலத்தில் எல்லை பிரச்னைகள் கொஞ்சம் அதிகரித்தது. எல்லை விவகாரத்தில் இந்தியா – சீனா உறவு சுமூகமாக இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். தன்னிச்சையாக எல்லை கட்டுப்பாடு கோட்டை மாற்றி அமைப்பதற்கு இந்தியா உடன்படவில்லை என்பதால், அதில் சிக்கல் உருவாகி இருக்கிறது.

வெளியுறவு கொள்கை, தேச பாதுகாப்பு ஆகியவை குறித்து யோசிக்கும் போது, அரசின் ராஜதந்திரம், வெளியுறவு கொள்கைகள் பற்றி சில விஷயங்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். சமாதானத்தை விரும்பும் நாடாக இந்தியாவிற்கு பல எதிர்பார்ப்புகள் உள்ளன. தற்போது சுதந்திரமான பொருளாதார பலம் மிக்க நாடாக இந்தியா பார்க்கப்படுகிறது” என அவர் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top