திமுகவுக்கு இருக்கின்ற அக்கறை ஒன்றே ஒன்றுதான். துணை முதலமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும். அதை ஒன்றை தவிர வேற எந்தவிதமான நோக்கமும் கிடையாது என தேனியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் ‘‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’’ 28வது நாளாக (நவம்பர் 24) நடைபெற்றது. இந்தக்பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உரையாற்றியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக நடைபெறுகின்ற ‘‘தமிழகம் தலைநிமிர தமிழனின் எழுச்சிப் பயணம்’’ இன்றைக்கு 28வது நாளாக தேனி மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கும் இந்தப் பகுதியில் நடைபெறுகிறது.

தேனி மாவட்டம் இரண்டு முதலமைச்சர்களை தந்த மாவட்டம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை உருவாக்கிய ஆண்டிப்பட்டி, புரட்சித்தலைவி அம்மாவை உருவாக்கிய ஆண்டிப்பட்டி என்பதால் இங்கு மருத்துவக்கல்லூரியை அதிமுக அரசு அமைத்தது.
தேனி மாவட்டத்தில் மணல் திருட்டு நடைபெறுகிறது. அதனை தடுக்க போகின்ற அதிகாரிகள் மீது தாக்குதல் நடைபெறுகிறது. எங்கு பார்த்தாலும் லஞ்சம், லாவண்யம் ஆட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம் போகமுடியவில்லை. ஒரு மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்தப்பகுதியில் விவசாயிகள் பயன்பெற வேண்டும். ஆனால் இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையும் திமுக அரசு எடுக்கவில்லை. வைகையாற்றின் கால்வாயை திறக்கவே இல்லை. திமுக அரசுக்கு அதுப்பற்றி அக்கறையே கிடையாது.
அவர்களுக்கு இருக்கின்ற அக்கறை ஒன்றே ஒன்றுதான். துணை முதலமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும். அதை ஒன்றை தவிர வேற எந்தவிதமான நோக்கமும் கிடையாது. இன்றைக்கு எந்த ஊருக்கு போனாலும் கஞ்சா, பள்ளிக்கூட வாசலில் கஞ்சா விற்கப்படுகிறது.
இன்றைக்கு மலமாடுக்கு போய் வந்தோம். அங்கு மாடுகளை வைத்து பிழைக்கின்ற ஒரு சமூதாயம். அவர்களுக்கு வேற எதுவுமே தெரியாது. ஆனால் இன்றைக்கு வனத்துறையினரால் அந்த மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர். இது மிகவும் வேதனையான சம்பவம். பழங்குடியினர் அங்கு வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

காவல்நிலையத்தில் 16 வயது பெண் புகார் அளிக்க சென்றால் அப்பெண்ணையே பாலியல் பலாத்காரம் செய்யும் அளவிற்கு இன்று காவல்துறை மிக மோசமாக உள்ளது. 34 லாக்கப் டெத் மரணங்கள், 18200 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளது. சட்டம் ஒழுங்கு எங்கு உள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 4 கொலைகள், 8 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளது.
தவெக தலைவர் விஜய் கரூரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்திற்கு போய் உள்ளார். விஜய் மைக்கை எடுத்த உடனே பேசுகிறார் பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று பாட்டு பாடுகிறார். பின்னர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இங்க இருக்கின்ற பெண்களுக்கு பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்றால் தெரியாது, திமுக கூட்டம் கூடினால் அங்கு டாஸ்மாக் விற்பனை அதிகரிக்கும். 500 ரூபாய் கொடுத்து கூட்டத்தை கூட்டுவார்கள். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி அப்படி இல்லை. 5 பைசா கொடுக்காமல் அவ்வளவு பேர் நமக்காக கூடியுள்ளனர். நாங்கள் ஒன்றும் சினிமா நடிகர்கள் அல்ல, ஆனால் இந்த ஆட்சியின் மீது ஏற்பட்ட வெறுப்பு எங்கள் மீது பாசமாக மாறியுள்ளது.
இன்றைக்கு திமுகவை விட தேசிய ஜனநாயக கூட்டணி 10 சதவீதம் முன்னணியில் உள்ளது என ஒரு கருத்துக்கணிப்பு சொல்கிறது என்ற செய்தி இன்றைக்கு வந்துக்கொண்டிருக்கிறது. திமுகவுக்கு கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது. இனி யாராலும் திமுக ஆட்சியை காப்பாற்ற முடியாது.
மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ்நாட்டிற்கு 16 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு திட்டங்களை தந்திருக்கிறார். இந்த மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரம் விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றிற்கு ஆறாயிரம் ரூபாய் வீதம் 129 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்.
2 ஆயிரம் சாலையோர வியாபாரிகளுக்கு 4 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார். நமது மாவட்டத்தில் 7200 வீடுகள், ஒன்றரை லட்சம் பேருக்கு ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, தேனி ரயில்நிலையம் புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இப்போது நடந்து கொண்டிருக்கும் ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் உருவாக்கிய இந்த கூட்டணியை வெற்றிப்பெற செய்ய வேண்டும் என்பது நமது ஒவ்வொருவரின் கடமை என்று இந்த நேரத்தில் உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் உரையை நிறைவு செய்தார்.
மேலும், இதுதொடர்பாக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
2026ல்,200 தொகுதிகள் நமக்கே…
இது தான் இறைவன் போட்டு வைத்திருக்கும் கணக்கே… ஆட்சி மாற்றம் தமிழகத்தில் ஏற்படப் போகிறது விரைவிலே…
மக்கள் மனம் கவர்ந்த மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வழியிலே…
எங்கிருந்தாலும் திரும்பிப் பார்க்க வைத்துவிடும் ஏலக்காயின் மணம்…
அதைப்போல பண்பும், அன்பும் கொண்டதுதான் தேனி மக்களின் மனம்…
தேர்ந்தெடுத்த மக்களுக்கு தேவையில்லாத தலைவலி, நடுங்க வைக்கும் நாட்கள் என கொடூர ஆட்சியை கொடுத்து வரும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியாளர்களே, தங்களுக்கான தேர்வு யார், தேவையானவர்கள் யார் என்பதை தெரியப்படுத்த காத்திருக்கிறார்கள் தமிழக மக்கள் எதிர்வரும் 2026 தேர்தலிலே. வீழ்ச்சியடைந்த ஆட்சியை வழங்கி வரும் உங்களை விரைவில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்போகின்றார்கள் என்பது தெளிவுபட தெரியப்படுத்தப்படுகிறது தேனியிலிருந்து, ‘தமிழகம் தலை நிமிர,தமிழனின் பயணம்’ 25ம் நாளான இன்றைய தினத்தில்.
இன்றைய நிகழ்வில் மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன், மாநில செயலாளர் கதலி நரசிங்கபெருமாள், தேனி மாவட்ட தலைவர் ராஜபாண்டி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோட்டை ராமர், அதிமுக தேனி மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் கழக அமைப்புச் செயலாளர் ஜக்கையின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

