நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-இல் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. வாக்காளர்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாக்களித்த காட்சிகள், பேருந்து, ரயில், விமானங்களில் கூடுதல் நெரிசல் ஏற்பட்டது போன்ற சூழல்கள் தேர்தலின் மீதான மக்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த அதிக வாக்குப்பதிவு திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலையின் வெளிப்பாடா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2021 தேர்தலில் அளிக்கப்பட்ட சில வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேறவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை திட்டம், அதன் தகுதி வரம்புகள், பின்னர் விரிவாக்கம் போன்றவை தேர்தல் பிரச்சாரங்களில் விவாதமாக மாறின.
மேலும் தேர்தல் நெருங்கியபோது பல நலத்திட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டதும், வாக்காளர்களை கவரும் முயற்சியாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. சில இடங்களில் பணப்பட்டுவாடா குற்றச்சாட்டுகளும் பேசப்பட்டன. அதேசமயம், மக்கள் பணத்தைப் பெற்றாலும் தாங்கள் விரும்பும் கட்சிக்கே வாக்களிப்போம் என்ற மனநிலையும் சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது.
அதிமுக-பாஜக-என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக ஒரு தரப்பு வாதிட, மற்றொரு தரப்பு அதிக வாக்குப்பதிவு மாற்றத்திற்கான சுட்டிக்காட்டாக மட்டும் பார்க்க முடியாது என கூறுகிறது.
இறுதியில், அதிக வாக்குப்பதிவு ஆட்சிக்கு எதிரான அலையா, மாற்றத்துக்கான முன்னோட்டமா, அல்லது சாதாரன ஜனநாயக எழுச்சியா என்பது மே 4 முடிவுகளே தெளிவுபடுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
மோ. வினோத்ராஜா








