எந்த சக்தியாலும் இந்தியாவைப் பணிய வைக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
குஜராத் சோமநாதர் கோயிலின் 75வது ஆண்டு மகோத்சவத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை பணிய வைக்க முடியாது. தேச நலனே முதன்மையானதாக இருக்கும்போது, எந்த அழுத்தமும் நமது உறுதியை அசைக்க முடியாது.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் தலைமையிலான ஆட்சியின் போது உலகளாவிய அழுத்தங்கள் இருந்தபோதிலும் இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. தேசிய நலனே எப்போதும் முதன்மையானது என்பதை இது மீண்டும் உறுதிப்படுத்தியது.
இது ஒரு விழா மட்டுமல்ல; அடுத்த 1000 ஆண்டுகளுக்கான இந்தியாவின் உத்வேகமாகத் திகழும். இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்றது; 1951ல் சோமநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிகழ்வு, இந்தியாவின் சுதந்திர உணர்வை உலகிற்குப் பிரகடனப்படுத்தியது. சூறையாடியவர்கள் சோமநாதர் ஆலயத்தின் பெருமையை அழிக்க முயன்றனர்; இந்த ஆலயம் மீண்டும் மீண்டும் இடிக்கப்பட்ட போதிலும், அது தொடர்ந்து மீண்டும் கட்டமைக்கப்பட்டது.
இந்தியாவில், பாரம்பரியமும் நவீனத்துவமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை; இவை இரண்டும் கைகோர்த்துப் பயணிக்கின்றன. மே 11ம் தேதி நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்; ஏனெனில், இதே தேதியில் (1998ம் ஆண்டில்) தான் இந்தியா தனது முதல் மூன்று அணு ஆயுதச் சோதனைகளை வெற்றிகரமாக நிகழ்த்தியது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
சோமநாதர் கோவிலின் பாரம்பரியம் மற்றும் ஆன்மிக முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், பிரதமர் மோடி சிறப்பு நாணயம், தபால் தலையை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி மற்றும் பல தலைவர்களும் கலந்துகொண்டனர்.
முன்னதாக குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் கோவிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அவர், அங்கு 75வது ஆண்டு மகோத்சவத்தை முன்னிட்டு சிறப்பு வழிப்பாடு நடத்தினார். இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”சோமநாதரின் புனித தலத்திற்கு னந்தது ஒரு தெய்வீக அனுபவத்தை தந்தது” என குறிப்பிட்டுள்ளார்.



