மேற்கு வங்க தேர்தல் வாக்குப்பதிவின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜகவுக்கு வாக்களிக்கும் இடம் மறைக்கப்பட்டிருந்த விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மேற்கு வங்கத்தில் 2ம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வமுடன் திரண்டு வந்து தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். மொத்தம் 7 மாவட்டங்களில். 142 தொகுதிகளில் 1448 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தில்லுமுல்லு செய்திருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர். குறிப்பாக, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள டைமண்ட் ஹார்பர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பால்டாவில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜகவுக்கு வாக்குப்பதிவு செய்யக் கூடாது என்பதற்காக பட்டன் மீது டேப் ஒட்டி மறைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
பாஜகவுக்கு அடுத்து இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கான பட்டனும் இதேபோன்று டேப் போட்டு ஒட்டப்பட்டு இருந்தது. இதேபோன்று பல வாக்குச்சாவடிகளில் பட்டன் மீது டேப் ஒட்டப்பட்டு உள்ளது. இது குறித்து பாஜக முக்கிய பிரமுகரான அமித் மால்வியா வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.
பாஜக புகார் குறித்து மேற்கு வங்க மாநில தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் அகர்வால் கூறியதாவது;
அந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறுதேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தக்கூடாது, விரலில் வைக்கப்படும் அடையாள மை, வாக்களிப்பவரின் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.




