ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை வெற்றிகரமாக நிகழ்த்தி (மே 07) இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது; இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து, சமூக வலைத்தள பக்கங்களில் முகப்பு படமாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதல் ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக நிகழ்த்தி உலக நாடுகள் அனைத்தையும் திரும்பி பார்க்க வைத்தது. இந்த ராணுவ நடவடிக்கை முடிந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது.
இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து, சமூக வலைத்தள பக்கங்களில் முகப்பு படமாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஓராண்டுக்கு முன்பு, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, நமது ஆயுதப் படைகள் தங்கள் வீரத்தை வெளிப்படுத்தி, நமது மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு பதிலடியை கொடுத்தன.
நமது ஆயுதப் படைகளைக் குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்கிறார். நமது படைகளுக்கும், ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது அவர்கள் ஈட்டிய வெற்றிக்கும் மரியாதை செலுத்தும் அடையாளமாக, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நான் பகிர்ந்துள்ள முகப்பு படத்தை மாற்றுமாறு அனைவரையும் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.




