குஜராத் மாநில உள்ளாட்சித் தேர்தலில் 15 மாநகராட்சிகளையும் கைப்பற்றி பாஜக அமோக வெற்றிபெற்றது.
மாநகராட்சிகள், நகராட்சிகள், பஞ்சாயத்துகள் என உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 9,900 இடங்களில் 6,472 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குஜராத்தில் அகமதாபாத், சூரத், வதோதரா உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 84 நகராட்சிகள், 34 மாவட்ட பஞ்சாயத்துகள், 260 தாலுகா பஞ்சாயத்துகளுக்கு கடந்த (ஏப்ரல் 26) தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் வாக்களிக்க 4.18 கோடிக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தகுதிபெற்றிருந்தனர்.
மாநகராட்சிப் பகுதிகளில் 55.1 சதவீதம், நகராட்சிகளில் 65.53 சதவீதம், மாவட்ட பஞ்சாயத்துகளில் 66.64 சதவீதம், தாலுகா பஞ்சாயத்துகளில் 67.26 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில், 15 மாநகராட்சிகளையும் 30 மாவட்ட பஞ்சாயத்துகளையும் பாஜக கைப்பற்றியுள்ளது. மாநகராட்சிகளில் 748, நகராட்சிகளில் 1,827, மாவட்ட பஞ்சாயத்துகளில் 765, தாலுகா பஞ்சாயத்துகளில் 3,132 என மொத்தம் 6,472 இடங்களில் (ஏப்ரல் 28) மாலை நிலவரப்படி பாஜக வென்றுள்ளது.
இத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியை மக்கள் படுதோல்வியடைய செய்துள்ளனர்.




