நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் விஜய் எந்த தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு (மே 01) கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மேற்கில் சூரியன் மறைவதும், கிழக்கில் சந்திரன் உதயமாவதும் ஒரே நேரத்தில் நிகழும் அபூர்வ காட்சியை காண சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்தனர். அதன்படி கடலில் இருந்து தோன்றிய முழு நிலவை காண கடற்கரையில் பார்வையாளர்கள் அமரும் பகுதியில் ஏராளமானோர் அமர்ந்து இருந்தனர்.
ஆனால் மேகமூட்டம் காரணமாக சந்திரன் உதிப்பதையும், சூரியன் மறையும் காட்சியையும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிறிது நேரம் காத்திருந்து, மேகமூட்டங்களுக்கு இடையே தோன்றிய சந்திரனை கண்டு சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
பின்னர் கடற்கரை பகுதியில் சித்ரா பௌர்ணமி சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வழிபாட்டில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் விஜயதரணி, கன்னியாகுமரி பாஜக நிர்வாகிகள் மற்றும் பகவதி அம்மன் கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வை தொடர்ந்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு வந்துள்ளது. அதுவும் திமுக கூட்டணியால் கருத்து திணிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனால் கருத்துக்கணிப்பு தொடர்பாக நாம் பேச வேண்டியதில்லை, திமுகவின் கடந்த ஐந்து ஆண்டு கால மோசமான ஆட்சி குறித்து வரும் நான்காம் தேதி தெரிய வரும்.
தமிழ்நாட்டில் பாமர மக்கள், வியாபாரிகள், பெண்கள், அரசு ஊழியர்கள் போன்றோர் தற்போதைய ஆட்சிக்கு எதிரான மனநிலையில் காணப்பட்டனர். இந்தத் தேர்தலில் விஜய் எந்த தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு இல்லை” என்றார்.
சமையல் எரிவாயு குறித்து கேட்ட போது பதில் அளித்த அவர், “உலக நாடுகளில் மோசமான போர் சூழலால் அண்டை நாடுகளில் சமையல் எரிவாயு கிடைக்காத நிலையில், உலக நாடுகளின் நட்பு நாடாக இந்தியா விளங்குவதால் சமையல் எரிவாயு தட்டுப்பாடின்றி கிடைக்கிறது” என்றார்.
வாக்கெடுப்புக்குப் பின்பு திமுக போன்ற கட்சிகள் கூட்டம் நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், பாஜக ஏன் அமைதியாக உள்ளது? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”இந்த தேர்தலில் பாஜக தான் வெற்றி பெறும், அதனால் அமைதியாக இருக்கிறோம்” என்றார்.


