---Advertisement---

ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்கள் சுரண்டப்படலாமா? எடப்பாடி பழனிசாமி

On: January 25, 2026 7:31 PM
Follow Us:
---Advertisement---

திமுக குடும்பம் ஆட்சியில் இருந்து கொள்ளையடித்து கொண்டிருக்கிறது. ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்கள் சுரண்டப்படலாமா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் தேர்தல் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் (ஜனவரி 23) நடைபெற்றது.
இந்தப் பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

இந்தியாவே மதுராந்தகத்தை நோக்கி பார்த்து கொண்டிருக்கிறது. பாரதப் பிரதமர் அவர்கள் என்ன பேசப் போகிறார் என்று நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் இந்த மண்ணில் கால் வைத்தவுடன் இயற்கையே சூரியனை மறைத்து விட்டது. எங்கே பார்த்தாலும் மக்கள் வெள்ளம், மக்கள் கடல் போல் காட்சியளிக்கின்றனர்.

இந்த மதுராந்தகம் பூமியே குலுங்குகின்ற அளவுக்கு மக்கள் வெள்ளம் திரண்டிக்கிறது. இதுவே நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிச் சான்று.

‘‘ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்’’

உரிய காலத்தையும், இடத்தையும் தேர்வு செய்து செயல்பட்டால் உலகத்தையே கையில் அடக்கலாம். என்பது இதன் பொருள்.

நம்மை எதிர்ப்பவர்கள் எத்தகைய வஞ்சக எண்ணம் கொண்டவர்களாக இருந்தாலும் தீயவர்களாக இருந்தாலும், உரிய காலத்தில், உரிய இடத்தில், உரியவர்களோடு ஒன்றிணைந்து உறுதியாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம். அப்படிப்பட்ட தருணம் நமக்கு இப்போது கிடைத்து இருக்கிறது.

திமுக ஆட்சி பொறுப்பேற்று நான்கே முக்கால் ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நான்கே முக்கால் ஆண்டுகளில் மக்களுக்கு இந்த ஆட்சி கொடுத்தது வேதனை, துன்பம், எல்லா துறைகளிலும் ஊழல். ஊழல் இல்லாத துறையே கிடையாது. மக்களை வாட்டி வதைக்கும் அரசு தேவையா? சொல்லுங்கள், மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும். ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்டுவது நியாயமா? இன்றைக்கு தமிழகத்தில் கருணாநிதியின் குடும்பம் ஆட்சியில் அமர்ந்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.

கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். அதன் பிறகு ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கிறார். ஆட்சி பொறுப்பேற்ற நான்கே முக்கால் ஆண்டுகளில் அவர் செய்த சாதனை ஒன்றே ஒன்று, ஊழல், ஊழல், ஊழல் மட்டுமே.

தீயசக்தி திமுகவை வீழ்த்துவோம். பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நிறைவேற்றுவோம். நம்முடைய தேசிய ஜனநாயக கூட்டணியுடைய சக்தியால் பாரத பிரதமர் நமக்கு துணை நிற்கிறார். நமது இயக்கம் வலிமையான இயக்கம். நம்முடைய கூட்டணி வெற்றிக்கூட்டணி, வலிமையான கூட்டணி. நம்முடைய கூட்டணி இத்தேர்தலில் 210 இடங்களில் வெல்லும். நாம் ஆட்சி அமைப்போம்.

ஸ்டாலின் சொல்கிறார் தமிழகத்திற்கு மத்தியில் இருந்து எந்த ஒரு திட்டங்களும் கிடைக்கவில்லை என்று ஒரு தவறான தகவலை சொல்லிக் கொண்டிருக்கிறார். சிந்தித்து பார்க்க வேண்டும். அதிமுக ஆட்சியில் தான் மத்தியில் பல திட்டங்களை பெற்றோம். நாம் கேட்ட திட்டங்களை கொடுத்தார்கள். கேட்ட நிதியை கொடுத்தார்கள்.

தமிழகம் முழுவதும் இருக்கின்ற பல்வேறு ரயில்வே கடவுகளில் உயர் மட்ட பாலம் கேட்டோம். அதிகமான பாலங்களை கொடுத்தது மத்திய அரசு. அதேபோல் தேசிய நெடுஞ்சாலைகள், தமிழகத்தில் இருக்கின்ற போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளை வழங்கினார்கள்.

அதுமட்டுமல்ல, சென்னை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கின்ற காரணத்தினாலே மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் இரண்டு திட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. சுமார் 63 ஆயிரம் கோடி ரூபாய் ஒரே திட்டத்திற்கு அனுமதி வழங்கியது. அந்த திட்டத்தை மத்திய அமைச்சர்களே நேரடியாக வந்து அடிக்கல் நாட்டினார்கள். அந்த சாதனையை படைத்தோம். இது எல்லாம் மத்திய அரசு கொடுத்த திட்டம் அல்லவா?

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படுகின்றன காவிரி நீர் கடலில் போய் கலக்கின்றது. அந்த நதி மாசுபடாமல் இருப்பதற்காக நான் முதலமைச்சராக இருந்தபோது பாரதப் பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தேன். நடந்தாய் வாழி காவேரி திட்டம்.

இந்த திட்டத்திற்கு சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தேவை. கொடுத்தவுடன் பிரதமர் பார்த்தார். அற்புதமான திட்டம் இந்த திட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றி தருவேன் என்று சொல்லி குடியரசுத்தலைவர் உரையில் இடம்பெற செய்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த அரசு அந்த திட்டத்தை முடக்கி வைத்திருக்கிறது.

உண்மையிலேயே இந்த அரசுக்கு மக்கள் மீது அக்கறை இருந்தால் மத்திய அரசு அனுமதி கொடுத்த திட்டத்தை நிறைவேற்ற மனமில்லை. சிந்தித்து பாருங்கள். சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய், ஓராயிரம், இரண்டாயிரம் அல்ல. 14 ஆயிரம் கோடி ரூபாய் நம்முடைய தமிழ்நாடு நலம் பெறுவதற்காக மத்திய அரசு அனுமதி கொடுத்து இருக்கிறது. பாரத பிரதமர் அவர்கள் முனமுவந்து கொடுத்த அந்த திட்டம்.

காவிரி ஓரமாக கலக்கின்ற கழிவுநீரால் அந்த நீர் மாசுபடுகிறது. அந்த நீர் மாசுபடாமல் இருப்பதற்கு அதை சுத்திகரித்து நதியில் விடுகின்ற திட்டம்தான் இந்த திட்டம்.

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறுகின்ற நீர், பவானிசாகர் அணையில் இருந்து வெளியேறுகின்ற நீர், நொய்யலில் இருந்து வெளியேறுகின்ற நீர், அமராவதி அணையில் இருந்து வெளியேறுகின்ற நீர், இந்த நீரை எல்லாம் சுத்திகரித்து நதியில் விடுகின்ற போது காவிரி நதியில் கலக்கின்ற போது சுத்தமான நீராக இருக்கும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் காவிரி நதிதான் ஜீவ நதி. அந்த நதியை நம்பித்தான் 20 மாவட்ட மக்கள் குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தி வருகிறார்கள். டெல்டா பாசன விவசாயிகளுக்கு ஒரு நல்ல நீர், பயிர்களுக்கு பாய்ச்சுகின்ற போது எந்த நோய்களும் தாக்காது. அப்படிப்பட்ட அற்புதமான திட்டத்தை நமக்கு வழங்கினால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அந்த திட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

மீண்டும் உங்கள் ஆதரவுடன் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்கின்றபோது பாரத பிரதமரின் ஆசியால் இந்த திட்டம் நிறைவேறும்.

அதேபோல்தான் வைத்த கோரிக்கை ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் கொடுக்கப்பட்டது. இந்திய வரலாற்றிலேயே ஒரு மாநில அரசுக்கு ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் கொடுத்த வரலாறு கிடையாது. அந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளை பாரத பிரதமர் நரேந்திர மோடி நமக்கு வழங்கினார். அதனால் நம்முடைய மாணவர்கள் அதிக இடங்களில் மருத்துவப்படிப்பில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். இதெல்லாம் சாதனை. இன்னும் பல திட்டங்கள் மத்தியில் இருந்து நமக்கு கிடைக்கப்பெற்றன.

கொரோனா காலத்தில் வைரஸ் நோயால் வல்லரசு நாடுகளில் கூட மக்களை காப்பாற்ற முடியவில்லை. அந்த காலகட்டத்திலும் விலை மதிக்க முடியாத உயிர்களை காப்பாற்றுவதற்கு பிரதமர் எடுத்த நடவடிக்கை தான் லட்சக்கணக்கான மக்கள் உயிர் பிழைத்தார்கள்.

அந்த நோய் எப்படி தாக்கும், எப்படி வரும். அதற்கு என்ன சிகிச்சை அளிக்க முடியும். அதற்கு என்ன மருந்து என்று கண்டுபடிக்க முடியாத சூழ்நிலையிலும் கூட தன்னுடைய திறமையால் ஆற்றலால் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு உரிய மருந்தை கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளித்து விலை மதிக்க முடியாத உயிர்களை காப்பாற்றிய மாமனிதம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.

இந்திய நாட்டு மக்கள் மட்டுமல்ல, வெளிநாட்டில் இருக்கின்ற மக்களுக்கும் அந்த உயிர்களை காப்பாற்றுவதற்கு விலையில்லா மருந்துகளை கொடுத்து அங்குள்ள மக்களையும் காப்பாற்றிய மனிதநேயம் படைத்த தலைவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுகிறேன்.

உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற அண்ணாவின் கொள்கையை உரக்கக்கூறி, பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா வகுத்து தந்த அமைதி, வளம், வளர்ச்சி என்பதை தாரக மந்திரம் என்று கூறி எங்கள் பயணத்தில் உறுதியாக எங்களுக்கு ஆதரவு தரும், ஆதரவுக்கரம் நீட்டிய பாரத பிரதமர் அவர்களுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம். பை பை ஸ்டாலின். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Post

Leave a Comment