நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், சமூக வலைதள பிரச்சாரங்கள் மூலம் வாக்கு சதவீத உயர்வுக்கு தாங்களே காரணம் என தவெக வட்டாரங்கள் கூறி வருகின்றன. அமைச்சரவை பட்டியல் வெளியிடும் அளவுக்கு ஆதவின் வார்ரூம் செயல்படுகிறது என்ற பேச்சுகளும் பரவின. ஆனால் நடந்திடாத விஷயங்களையும் நடந்ததாக காட்டி, விஜய்க்கான அலை வீசுகிறது என உருவாக்கப்பட்ட பல டிரெண்டுகள் பல இடங்களில் உடைந்துவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தவெகவில் ஆதவ் போன்ற சிலர் மட்டுமே, “விஜய்க்கு விழுந்த வாக்குகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” என தொடர்ந்து கூறி வருவதாகவும், பல மாநிலங்களிலிருந்து களநிலவர நிபுணர்களை அழைத்து சர்வே எடுத்தோம், அதில் நமக்கே சாதகமான முடிவுகள் வருகிறது என கூறி அறிக்கைகள் வெளியிட ஊக்குவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
இதற்கிடையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. வாக்குப்பதிவு நாளிலிருந்தே அமைதியாக உள்ள செங்கோட்டையன் குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன. ஏப்ரல் 29 மாலை வெளியாகும் களநிலவரங்களுக்குப் பிறகு பல கணிப்புகள் உடையும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் விஜய் மே 4ஆம் தேதி ஆஸ்திரேலியா செல்கிறார் என்ற தகவல் வெளியாக, உடனடியாக ஆதவ் அர்ஜுனா பத்திரிக்கையாளர்களை சந்தித்து, “அப்படி எதுவும் இல்லை; இது திமுக பரப்பும் பொய் தகவல்” என மறுத்தார். ஆனால் தொடர்ந்து மாறி மாறி வரும் தகவல்களால் தவெக வட்டாரமே குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே “மே 4 பாருங்கள்” என்ற விஜய் டயலாக்கை மீண்டும் மீண்டும் கூறிய புஸ்ஸி ஆனந்தின் பேச்சும் சமூக வலைதளங்களில் நகைச்சுவையாக பேசப்பட்டு வருகிறது. இதனால் தவெக தரப்பின் தகவல் பரிமாற்றமே தற்போது கேள்விக்குறியாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் விமர்சிக்கின்றன.
மோ. வினோத்ராஜா




