தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம் அனுப்பியிருந்தது. அதனை ஏற்ற ஆளுநர், சந்திப்பிற்கான நேரத்தையும் ஒதுக்கிய தகவல் வெளியானது.
இந்த நிலையில் திடீரென காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்த தவெக, 113 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்கப் போவதாக கூறி விஜய் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆளுநரை நேரில் சந்தித்தனர்.
அப்போது ஆளுநர், “118 எம்.எல்.ஏக்களின் உறுதியான ஆதரவு கடிதம் இருந்தாலே போதும்; நேரில் வர தேவையில்லை. அதற்கு குறைவான எண்ணிக்கையுடன் ஆட்சியமைக்க வாய்ப்பு வழங்கினால், அது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும். நாளை அதிமுக அல்லது திமுக கூட இதே கோரிக்கையை வைத்தால் அதற்கும் இதே நடைமுறையே அமலும்,” என்று தெளிவாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் இடதுசாரி கட்சிகளும், வி.சி.கவும் திமுகவுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடத்துவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவியது. வெளியில் ஒரு நிலைப்பாடு, உள்ளே வேறு பேச்சு என அரசியல் கட்சிகள் நடந்து கொள்வதாக விமர்சனங்கள் எழுந்தன. விஜயை முன்வைத்து சில கட்சிகள் அரசியல் லாபம் தேடுகின்றன என்ற குற்றச்சாட்டும் வலுத்துள்ளது.
மேலும், திமுகவிற்கு முதுகில் குத்தியது காங்கிரஸ்தான் என்ற பேச்சும் தேசிய அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த பரபரப்பான சூழலில், தவெக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், சில அதிமுக நிர்வாகிகளிடம் பேசி தவெகவிற்கு ஆதரவு அளிக்குமாறு கூறியதாக தகவல் வெளியானது. இதுவே அரசியல் வட்டாரத்தில் கடும் குழப்பத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து அதிமுக தலைமை, அனைத்து எம்.எல்.ஏக்களையும் தொடர்புகொண்டு புதுச்சேரியில் தங்க வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அவர்களை சந்தித்து, “நமக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது; பொறுமையாக இருக்க வேண்டும்,” என அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்றொரு புறம், திமுகவும் தனது எம்.எல்.ஏக்களை அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
“செங்கோட்டையன் இந்த விவகாரத்தில் தலையிடாமல் இருந்திருந்தால் நிலைமை கட்டுக்குள் இருந்திருக்கும்,” என அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மோ.வினோத்ராஜா




