“ஆட்சியமைக்க பெரும்பான்மை ஆதரவு தேவை. பெரும்பான்மை பலம் விஜய்யிடம் இல்லாததால், அதை உறுதிப்படுத்திய பின்னரே ஆட்சி அமைக்க அழைக்க முடியும்” என்று விஜய்யிடம் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கூறியதாக மக்கள் மாளிகை விளக்கமளித்துள்ளது.
தவெக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை ஆளுநர் மாளிகைக்குச் சென்று நேற்று (மே 06) சந்தித்தார். அப்போது ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை அவரிடம் வழங்கினார்.
இந்நிலையில், இன்று மீண்டும் விஜய், ஆளுநரை சந்திக்க மக்கள் மாளிகைக்குச் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பு 30 நிமிடங்களுக்கு மேலாக நடந்தது. இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் என்றும் பின்னர் இல்லை என்றும் ஊடகங்களில் மாறி மாறி செய்திகள் வெளியாகின. தவெக தரப்பும் சந்திப்பு பற்றி ஏதும் சொல்லவில்லை.
இந்நிலையில், இந்த சந்திப்பு தொடர்பாக ஆளுநர் மாளிகை (மே 07) அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்: தவெக தலைவர் விஜயை மக்கள் மாளிகைக்கு நேரில் அழைத்து ஆளுநர் அர்லேக்கர் பேசினார். ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை இல்லை என்பதை தவெக தலைவர் விஜயிடம் ஆளுநர் விளக்கினார். ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை தவெக நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



