முதலமைச்சர் பினராயி விஜயன் இண்டி கூட்டணியின் முக்கியமான தூண். பினராயி விஜயனும், சசி தரூரும் என்னுடன் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றதால் பலர் தூக்கத்தை இழப்பார்கள் என்று விழிஞ்சம் துறைமுகம் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் விழிஞ்சம் துறைமுகத்தை அதானி நிறுவனம் பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் ரூ.8,867 கோடி செலவில் அமைத்துள்ளது. இந்த சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி (மே 02) தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:- கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் அவர்களே, முதலமைச்சர் விஜயன் அவர்களே, மத்திய அமைச்சரவையைச் சேர்ந்த எனது நண்பர்களே, மேடையில் குழுமியிருக்கும் பிரமுகர்களே, கேரளாவைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளே வணக்கம்.

நண்பர்களே, இன்று பகவான் ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்தநாள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, செப்டம்பர் மாதத்தில், அவரது பிறந்த இடமான க்ஷேத்திரத்திற்கு செல்லும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. எனது நாடாளுமன்றத் தொகுதியான காசியில் உள்ள விஸ்வநாதர் தாம் வளாகத்தில் ஆதி சங்கராச்சாரியாரின் பிரம்மாண்டமான சிலை நிறுவப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் தாமில் ஆதி சங்கராச்சாரியாரின் திருவுருவச் சிலை திறந்து வைக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இன்று தேவபூமி உத்தராகண்டில் கேதார்நாத் கோயிலின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. கேரளாவை விட்டு வெளியேறிய ஆதி சங்கராச்சாரியார் அவர்கள் நாட்டின் பல்வேறு மூலைகளிலும் மடாலயங்களை நிறுவி தேசத்தின் உணர்வைத் தட்டியெழுப்பினார். இந்த நன்னாளில் அவருக்கு எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் செலுத்துகிறேன்.
நண்பர்களே, ஒரு பக்கம் சாத்தியங்களுடன் கூடிய பரந்து விரிந்த சமுத்திரம். மறுபுறம் இயற்கையின் அற்புத அழகு. இவை அனைத்திற்கும் மத்தியில், புதிய யுக வளர்ச்சியின் அடையாளமாகத் திகழும் விழிஞ்ஞம் ஆழ்கடல் துறைமுகமும் இருக்கிறது. நான் கேரள மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, இந்த துறைமுகம் 8,800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் போக்குவரத்து மையத்தின் தற்போதைய திறனும் வரும் காலத்தில் மூன்று மடங்காக அதிகரிக்கும். உலகின் பெரிய சரக்குக் கப்பல்கள் இங்கு எளிதாக வர முடியும். இதுவரை இந்தியாவின் 75 சதவீத சரக்குகள் இந்தியாவுக்கு வெளியே உள்ள துறைமுகங்களில் தான் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இதனால், நாடு பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. இந்த நிலை மாறப்போகிறது. இப்போது நாட்டின் பணம் நாட்டுக்காக பயன்படுத்தப்படும். வெளியே சென்று கொண்டிருந்த பணம், கேரள மாநிலம் விழிஞ்ஞம் மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை கொண்டு வரும்.
நண்பர்களே, அடிமை முறைக்கு முன்பு, நமது இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செழிப்பைக் கண்டுள்ளது. ஒரு காலத்தில், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா பெரும் பங்கைக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில், மற்ற நாடுகளிலிருந்து நம்மை வேறுபடுத்தியது நமது கடல்சார் திறன் மற்றும் நமது துறைமுக நகரங்களின் பொருளாதார நடவடிக்கைகள் ஆகும். இதில் கேரளாவின் பங்களிப்பு அதிகம். கேரளாவில் இருந்து அரபிக்கடல் வழியாக உலகின் பல்வேறு நாடுகளுக்கு வர்த்தகம் நடந்து வந்தது. இங்கிருந்து கப்பல்கள் உலகின் பல நாடுகளுக்கு வணிகத்திற்காக சென்றன. இன்று, நாட்டின் பொருளாதார சக்தியின் பாதையை மேலும் வலுப்படுத்தும் உறுதியுடன் இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் கடலோர மாநிலங்களும், நமது துறைமுக நகரங்களும், வளர்ந்த இந்தியாவின் வளர்ச்சியின் முக்கிய மையங்களாக மாறும். நான் துறைமுகத்தைப் பார்வையிட்டு இப்போதுதான் திரும்பினேன், குஜராத் மக்கள் அதானி கேரளாவில் இவ்வளவு பெரிய துறைமுகத்தைக் கட்டியுள்ளார் என்பதை அறியும்போது, அவர் குஜராத்தில் 30 ஆண்டுகளாக துறைமுகத்தில் பணியாற்றி வருகிறார், ஆனால் இதுவரை அவர் அங்கு அப்படி ஒரு துறைமுகத்தைக் கட்டவில்லை என்ற குஜராத் மக்களின் கோபத்தைத் தாங்க அவர் தயாராக இருக்க வேண்டும். எங்கள் முதல்வருக்கும் நான் சொல்ல விரும்புகிறேன், நீங்கள் இந்திய கூட்டணியின் மிகவும் வலுவான தூண், சசி தரூரும் இங்கே இருக்கிறார், இன்றைய நிகழ்வு பலருக்கு தூக்கமில்லாத இரவுகளைத் தரும். செய்தி எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்றுவிட்டது.

நண்பர்களே, கட்டமைப்பு மற்றும் எளிதாக வர்த்தகம் செய்தல் ஆகிய இரண்டையும் மேம்படுத்தும்போதுதான் துறைமுகப் பொருளாதாரத்தின் முழுத் திறனும் உணரப்படும். கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அரசின் துறைமுகம் மற்றும் நீர்வழிகள் கொள்கையின் செயல்திட்டம் இதுதான். தொழில்துறை நடவடிக்கைகள் மற்றும் மாநிலத்தின் முழுமையான வளர்ச்சிக்கான பணிகளில் நாங்கள் விரைவாக முன்னேறியுள்ளோம். மத்திய அரசு, மாநில அரசுடன் இணைந்து, சாகர்மாலா திட்டத்தின் கீழ் துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளதுடன், துறைமுக இணைப்பையும் அதிகரித்துள்ளது. பிரதமரின் விரைவு சக்தித் திட்டத்தின் கீழ், நீர்வழிகள், ரயில்வேக்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் விமானப் பாதைகளின் இடைநிலை இணைப்பு விரைவாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. எளிதாக வர்த்தகம் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் துறைமுகங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புத் துறைகளில் முதலீட்டை அதிகரித்துள்ளன. இந்திய மாலுமிகள் தொடர்பான விதிகளிலும் இந்திய அரசு சீர்திருத்தங்களை செய்துள்ளது. அதன் பலன்களை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. 2014 ஆம் ஆண்டில் இந்திய மாலுமிகளின் எண்ணிக்கை 1.25 லட்சத்திற்கும் குறைவாக இருந்தது. தற்போது அவர்களின் எண்ணிக்கை 3.25 லட்சமாக அதிகரித்துள்ளது. இன்று மாலுமிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகின் முதல் மூன்று நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது.
நண்பர்களே, 10 ஆண்டுகளுக்கு முன்பு நமது கப்பல்கள் துறைமுகங்களில் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியிருந்தது என்பது கப்பல் தொழிலுடன் தொடர்புடையவர்களுக்கு தெரியும். சரக்குகளை இறக்குவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். இதனால், வியாபாரம், தொழில் மற்றும் பொருளாதாரத்தின் வேகம் பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளில் நமது முக்கிய துறைமுகங்களில் கப்பல்கள் திரும்பும் நேரம் 30 சதவீதம் குறைந்துள்ளது. நமது துறைமுகங்களின் செயல்திறனும் அதிகரித்துள்ளது, இதன் காரணமாக குறைந்த நேரத்தில் அதிக சரக்குகளை நாம் கையாளுகிறோம்.
நண்பர்களே, இந்தியாவின் இந்த வெற்றிக்குப் பின்னால் கடந்த பத்தாண்டுகளின் கடின உழைப்பும் தொலைநோக்குப் பார்வையும் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், நமது துறைமுகங்களின் திறனை இரட்டிப்பாக்கியுள்ளோம். நமது தேசிய நீர்வழிப் பாதைகளும் 8 மடங்கு விரிவடைந்துள்ளன. இன்று உலகின் முதல் 30 துறைமுகங்களில் நமது இரண்டு இந்திய துறைமுகங்களும் இடம்பெற்றுள்ளன. சரக்குப் போக்குவரத்து செயல்திறன் குறியீட்டில் நமது தரவரிசையும் மேம்பட்டுள்ளது. உலக கப்பல் கட்டும் பணியில் முதல் 20 நாடுகளுடன் இணைந்துள்ளோம். நமது அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்திய பிறகு, உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியாவின் உத்திசார் நிலைப்பாட்டில் இப்போது கவனம் செலுத்தி வருகிறோம். இந்த திசையில், கடல்சார் அமிர்த கால தொலைநோக்குத் திட்டத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய நமது கடல்சார் உத்தி என்னவாக இருக்கும் என்பதற்கான செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளோம். ஜி-20 உச்சிமாநாட்டில், பல பெரிய நாடுகளுடன் இந்தியா மத்திய கிழக்கு ஐரோப்பிய வழித்தடம் குறித்து நாம் ஒப்புக் கொண்டுள்ளோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த வழித்தடத்தில் கேரளா மிக முக்கியமான இடத்தில் உள்ளது. இதன் மூலம் கேரளா பெரிதும் பயனடையப் போகிறது.
நண்பர்களே, நாட்டின் கடல்சார் துறைக்கு புதிய உயரங்களை வழங்குவதில் தனியார் துறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் பொதுத்துறை-தனியார் பங்களிப்பின் கீழ் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியால், நமது துறைமுகங்கள் உலகத் தரத்திற்கு உயர்த்தப்பட்டிருப்பது மட்டுமின்றி, எதிர்காலத்திற்கு உகந்தவையாகவும் மாறியுள்ளன. தனியார் துறையின் பங்கேற்பு புதுமை மற்றும் செயல்திறன் இரண்டையும் ஊக்குவித்துள்ளது. ஊடகவியலாளர்கள் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தியிருக்கலாம், நமது துறைமுக அமைச்சர் தனது உரையை நிகழ்த்தும்போது, அதானியைக் குறிப்பிடும் போது, எங்கள் அரசின் பங்குதாரர், ஒரு கம்யூனிஸ்ட் அரசின் அமைச்சர் தனியார் துறைக்காக பேசுகிறார், எங்கள் அரசின் பங்குதாரர், இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் இந்தியா என்று கூறினார்.
நண்பர்களே, கொச்சியில் கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்க்கும் தொகுப்பை நிறுவவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த தொகுப்பு நிறுவப்படுவதன் மூலம், பல புதிய வேலை வாய்ப்புகள் இங்கு உருவாக்கப்படும். கேரளாவின் உள்ளூர் திறமைசாலிகள், கேரள இளைஞர்கள் முன்னேற வாய்ப்பு கிடைக்கும்.
நண்பர்களே, இந்தியாவின் கப்பல் கட்டும் திறன்களை அதிகரிக்க பெரிய இலக்குகளுடன் நாடு இப்போது முன்னேறி வருகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில், இந்தியாவில் பெரிய கப்பல்களின் கட்டுமானத்தை அதிகரிக்க புதிய கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இது நமது உற்பத்தித் துறைக்கு ஊக்கமளிக்கும். இது நமது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு நேரடியாக பயனளிப்பதுடன், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு வாய்ப்புகளையும் உருவாக்கும்.
நண்பர்களே, உள்கட்டமைப்பு வசதிகள் கட்டமைக்கப்படும்போது, வர்த்தகம் வளரும்போது, சாதாரண மனிதனின் அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும்போதுதான் உண்மையான அர்த்தத்தில் வளர்ச்சி ஏற்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் கேரளாவில் நெடுஞ்சாலைகள், ரயில்வேக்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றுடன் துறைமுக கட்டமைப்பு எவ்வளவு வேகமாக வளர்ந்துள்ளது என்பதை கேரள மக்கள் அறிவார்கள். கொல்லம் புறவழிச்சாலை, ஆலப்புழா புறவழிச்சாலை போன்ற திட்டங்கள் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்தன. கேரளாவுக்கு நவீன வந்தே பாரத் ரயில்களையும் வழங்கியுள்ளோம்.
நண்பர்களே, கேரளாவின் வளர்ச்சியின் மூலம் நாட்டின் வளர்ச்சி என்ற மந்திரத்தில் இந்திய அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. கூட்டுறவு கூட்டாட்சி உணர்வுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். கடந்த பத்தாண்டுகளில், கேரளத்தை வளர்ச்சிக்கான சமூக அளவுகோல்களில் முன்னெடுத்துச் செல்ல நாங்கள் பணியாற்றியுள்ளோம். ஜல் ஜீவன் இயக்கம், உஜ்வாலா திட்டம், ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் இலவச சூரிய வீடு திட்டம் போன்ற பல திட்டங்களின் மூலம் கேரள மக்கள் ஏராளமான நன்மைகளைப் பெற்று வருகின்றனர்.
நண்பர்களே, நமது மீனவர்களின் நலனுக்கும் நாங்கள் முன்னுரிமை அளித்து வருகிறோம். நீலப் புரட்சி மற்றும் பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ் கேரளாவில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பொன்னானி, புதியப்பா போன்ற மீன்பிடி துறைமுகங்களையும் நவீனப்படுத்தியுள்ளோம். கேரளாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவ சகோதர சகோதரிகளுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டிருக்கின்றன, அதன் காரணமாக பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் கிடைத்திருக்கின்றன.
நண்பர்களே, நமது கேரளா நல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மை நிறைந்த பூமியாக திகழ்கிறது. நாட்டின் முதல் தேவாலயம், மற்றும் உலகின் பழமையான தேவாலயங்களில் ஒன்றான புனித தோமையார் தேவாலயம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கட்டப்பட்டது. சில நாட்களுக்கு முன்புதான் நம் அனைவருக்கும் ஒரு பெரிய துயரத் தருணம் வந்துவிட்டதை நாம் அனைவரும் அறிவோம். சில நாட்களுக்கு முன்பு போப் பிரான்சிஸை நாம் இழந்தோம். நமது மாண்புமிகு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்கள் இந்தியாவின் சார்பில் அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அங்கு சென்றார். அவருடன் கேரளாவைச் சேர்ந்த நண்பரான அமைச்சர் ஜார்ஜ் குரியனும் சென்றார். இந்த இழப்பால் துக்கப்படுபவர்களுக்கு கேரள மண்ணிலிருந்து நான் மீண்டும் ஒருமுறை எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, போப் பிரான்சிஸ் அவர்களின் சேவை மனப்பான்மைக்காகவும், கிறிஸ்தவ பாரம்பரியத்தில் அனைவருக்கும் ஒரு இடத்தை வழங்க அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் உலகம் எப்போதும் அவரை நினைவில் கொள்ளும். எப்போதெல்லாம் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததோ, அப்போதெல்லாம் அவருடன் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்ததை எனது அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். அவரிடமிருந்து எனக்கு எப்போதும் தனி பாசம் கிடைப்பதை நான் கவனித்தேன். மனிதநேயம், சேவை, அமைதி போன்ற தலைப்புகளில் நான் அவருடன் விவாதித்தேன், அவரது வார்த்தைகள் எப்போதும் எனக்கு ஊக்கமளிக்கும்.
நண்பர்களே, இன்றைய நிகழ்ச்சிக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகளாவிய கடல்சார் வர்த்தகத்திற்கான முக்கிய மையமாக கேரளாவை மாற்றவும், ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்திய அரசு மாநில அரசுடன் தொடர்ந்து பணியாற்றும். கேரள மக்களின் ஆற்றலைக் கொண்டு, இந்தியாவின் கடல்சார் துறை புதிய உயரங்களை எட்டும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நன்றி. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தனது உரையை நிறைவு செய்தார்.