கிருஷ்ணகிரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பில் நடந்தது. இதில் முதற்கட்டமாக 150 பேருக்கு பணி நியமன ஆணைகளை இளைஞர் அணி மாநில தலைவர் எஸ்.ஜி.சூர்யா வழங்கினார்.
கிருஷ்ணகிரி பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி சார்பில் (அக்டோபர் 25) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு தலைமை வகித்தார். தருமபுரி மாவட்ட தலைவர் சரவணன் சிறப்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா கலந்துகொண்டு 150 மகளிருக்கு வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயற்குழு உறுப்பினர் சிவப்பிரகாசம், முன்னாள் மாநிலத் தலைவர் முனாவரி பேகம், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேந்திரன், கிருஷ்ணகிரி நகரத் தலைவி விமலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா பேசியதாவது: கட்சியின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களின் நலனுக்காக மட்டுமே இம்முகாம் நடத்தப்படுகிறது. இதில் கலந்துகொண்ட அனைத்து மகளிர்களுக்கும் நிச்சய பணி என்ற குறிக்கோளோடு இம்முகாம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் பாஜக இளைஞர் அணி சார்பாக தொடர்ந்து நடத்தி 5 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் வழங்குவது தங்களின் நோக்கம் இதற்காக மாவட்ட இளைஞரணி குழுவினர் அயராது உழைக்க வேண்டும். இவ்வாறு எஸ்.ஜி.சூர்யா கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக எஸ்.ஜி.சூர்யா சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: பா.ஜ.க இளைஞர் அணி சார்பாக 150 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி.
அடுத்த 4 மாதங்களில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், இராணிப்பேட்டை பகுதிகளில் 5,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தர, பா.ஜ.க., மாநில இளைஞர் அணித் தலைவர் என்ற முறையில் உறுதியளித்துள்ளோம்.
மாதம் ரூ.20,000 வரை சம்பளத்துடன், இலவசப் போக்குவரத்து, உணவு மற்றும் தங்குமிட வசதிகளும் இந்த வேலைவாய்ப்புகளில் அடங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்த இளைஞர் அணி மாநிலச் செயலாளர் பிரபாகரன் அவர்களுக்குப் பாராட்டுகள். இந்நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் கவியரசு, தருமபுரி மாவட்டத் தலைவர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த வாய்ப்பை வழங்கிய இறைவனுக்கு நன்றி. இவ்வாறு எஸ்.ஜி.சூர்யா கூறியுள்ளார்.

