மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகும், பாதுகாப்பு கருதி சுமார் 700 கம்பெனி மத்திய ஆயுதக் காவல் படையினர் அங்கேயே தங்கியிருப்பார்கள் என்று தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி தெரிவித்தார்.
தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகளைத் தவிர்க்கவும், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி மேலும் கூறியதாவது: தேர்தல் ஆணையத்தின் கடந்த மார்ச் 19-ம் தேதி வகுக்கப்பட்ட பாதுகாப்புத் திட்டத்தின்படி, வாக்குப்பதிவு முடிந்த பிறகும் 700 கம்பெனி மத்தியப் படையினர் மேற்கு வங்கத்திலேயே தங்கியிருப்பர். அவர்கள் சட்டம் – ஒழுங்கைப் பராமரிக்கவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பணியிலும் ஈடுபடுவர்.
மறு உத்தரவு வரும் வரை அவர்கள் பணியில் தொடர்ந்து இந்தப் பணிகளில் ஈடுபடுவார்கள். குறிப்பாக, பதற்றம் நிறைந்த பகுதிகளில் மாநில நிர்வாகத்திற்குத் துணையாக இவர்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வர். கள நிலவரம் மற்றும் பாதுகாப்பு முகமைகளின் அறிக்கையின் அடிப்படையில் படைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.




