---Advertisement---

வாக்களிக்க முடியாமல் தவித்த வாக்காளர்கள்:

On: April 24, 2026 7:57 AM
Follow Us:
---Advertisement---

சொந்த ஊர் செல்ல முடியாத விரக்தி
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த முறை வரலாறு காணாத அளவில் வாக்குப்பதிவு இடம்பெற்றது. இளம் வாக்காளர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் வாக்களிக்க முனைந்தனர்.
சென்னையிலிருந்து நாகர்கோவில் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. மேலும், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தும், கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் நிரம்பி வழிந்தன. வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் விமானம் மூலம் வந்து வாக்களித்தனர்.
ஆம்னி பேருந்துகளில் ரூ.4000 வரை செலவழித்து பயணம் செய்தவர்களும் இருந்தனர். இருந்தபோதிலும், போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு உரிய நேரத்தில் சென்று வாக்களிக்க முடியாமல் தவித்தனர். இதனால் சில இடங்களில் மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் பயணம் மேற்கொண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்து கிடைத்தபோதிலும், சரியான நேரத்தில் சென்றடைய முடியாமல் வாக்களிக்கும் வாய்ப்பை இழந்தவர்களும் இருந்தனர்.
இந்நிலையில், மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இரவு 8 மணி வரை வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது.
வியாழன் முதல் ஞாயிறு வரை விடுமுறை எடுத்துச் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்பும் போது இதே நிலை நீடிக்கலாம் எனக் கருதப்படுகிறது. மேலும், 100 டிகிரிக்கு மேல் உயர்ந்த வெப்பநிலை காரணமாக பேருந்துகள் மற்றும் நிலையங்களில் காத்திருந்த பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
“வாக்களித்த அனுபவத்துடன், பேருந்துகளில் முந்தியடித்து ஏறிய அனுபவமும் சேர்ந்தது,” என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எதுவாயினும், ஜனநாயகத் திருவிழாவாகக் கருதப்படும் 2026 தேர்தல் வாக்குப்பதிவு பெருமளவில் சிறப்பாக நடைபெற்றது.

மோ. வினோத்ராஜா

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment