---Advertisement---

இந்தியா – நெதர்லாந்து இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்து

On: May 18, 2026 5:36 PM
Follow Us:
---Advertisement---

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், இந்தியா – நெதர்லாந்து இடையே செமிகண்டக்டர், ராணுவம், கனிம வளம் உள்ளிட்ட 17 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் நான்கு ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு (மே 16) நெதர்லாந்து வந்த பிரதமர், அந்நாட்டு மன்னர் வில்லேம் அலெக்சாண்டர், ராணி மேக்சிமா ஆகியோரை சந்தித்து பேசினார்.

இதைத் தொடர்ந்து நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டனை சந்தித்து (மே 17) இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
மேற்காசியாவின் நிலைமை குறித்தும், உலகளாவிய எரிசக்தி வினியோக பாதிப்பு மற்றும் வர்த்தக வினியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.

உலக எரிபொருள் வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில், அனைத்து கப்பல்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
ரஷ்யா – உக்ரைன் இடையே நீடிக்கும் போரை, அமைதி பேச்சு வாயிலாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என இருவரும் தெரிவித்தனர்.

அறிவியல் மற்றும் புத்தாக்கம், சுகாதாரம், விவசாயம், நீர் மேலாண்மை, பருவநிலை மாற்றம், எரிசக்தி மாற்றம், கடல்சார் மேம்பாடு, இரு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவுகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

உலகளாவிய அரசியல் நிகழ்வுகள் குறித்து விவாதித்தபோது, பிராந்திய ஒருமைப்பாடு, கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் அமைதியான இந்தோ – பசிபிக் பிராந்தியத்துக்கு இரு தலைவர்களும் அழைப்பு விடுத்தனர்.

பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுவதில் சகிப்புத்தன்மை கடைப்பிடிக்க வேண்டும் என, மோடி – ஜெட்டன் வலியுறுத்தினர்.

ஐ.நா., சபையின் பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைப்பதற்கு நெதர்லாந்து தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

இதையடுத்து, வர்த்தகம் மற்றும் முதலீடு, ராணுவம், கனிம வளம், ‘செமிகண்டக்டர், விண்வெளி, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் குவான்டம் கணினி, இடப்பெயர்வு உட்பட 17 துறைகளில் இந்தியா – நெதர்லாந்து நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

நெதர்லாந்து பிரதமருடனான சந்திப்பின் போது பிரதமர் மோடி பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா – நெதர்லாந்து உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று மற்றும் மக்கள்சார் உறவுகள் ஆழமாக வேரூன்றியுள்ளது.

இதனால், நெதர்லாந்தை தன் முக்கியமான கூட்டாளிகளில் ஒன்றாக இந்தியா கருதுகிறது. ஒவ்வொரு துறையிலும், நெதர்லாந்தின் நிபுணத்துவமும், இந்தியாவின் திறமையும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

புதுமை படைப்பு, முதலீடு, நிலைத்தன்மை மற்றும் ராணுவம் ஆகிய துறைகளில் நம் ஒத்துழைப்பை புதிய உயரங்களுக்கு நாம் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நெதர்லாந்து நாட்டு வர்த்தக தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.

பின், நெதர்லாந்தில் இருந்து ஸ்வீடன் நாட்டுக்கு மோடி நேற்று புறப்பட்டார். ஷிபோன் விமான நிலையத்தில் அவரை, நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் வழியனுப்பி வைத்தார்.

ஸ்வீடன் சென்ற பிரதமருக்கு, கோதன்பர்க் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்துக்கு நேரில் வந்த ஸ்வீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டெர்சன், பிரதமர் மோடியை வரவேற்றார்.

வர்த்தகம், ராணுவம், தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பு குறித்து ஸ்வீடன் தலைவர்களுடன் பிரதமர் இன்று பேச்சு நடத்தவுள்ளார்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Post

Leave a Comment