2026 கேரளம் சட்டமன்ற தேர்தலில் 21 தொகுதிகளில் பாஜகவின் வாக்கு சதவீதம் 20 சதவீதத்தை கடந்துள்ளது. மேலும் 10 தொகுதிகளில் 30 சதவீதத்துக்கும் மேல் பாஜக வாக்குகளை பெற்று அம்மாநிலத்தில் வலுவாக காலூன்றியுள்ளது.
கேரளம் மாநில சட்டமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் ஆட்சி தூக்கி எறியப்பட்டுள்ளது. அங்கு காங்கிரஸ் கூட்டணி வெற்றிப்பெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில் பாஜக அங்கு மிகப்பெரிய வாக்கு சதவீதம் பெற்று 3 சட்டமன்ற உறுப்பினர்களையும் பிடித்துள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள நெமோன், கழக்கூட்டம் மற்றும் சத்தன்னூர் ஆகிய மூன்று தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள நெமோன் தொகுதி பாஜகவின் மிக வலுவான கோட்டையாக நீண்ட காலமாகக் கருதப்பட்டு வருகிறது.
இத்தொகுதியில் பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் வெற்றி பெற்றார். இவர் அம்மாநில பாஜக தலைவராவார். அவர் சிபிஐ கட்சியின் மூத்த நிர்வாகி சிவன்குட்டியை 3,590 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அங்கு காங்கிரஸ் வேட்பாளர் சபரிநாதன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். மற்றொரு தொகுதியான கழக்கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சரான முரளீதரனும் வெற்றி பெற்றார்.
இது திருவனந்தபுரம் பகுதியில் பாஜக அடைந்த மற்றொரு குறிப்பிடத்தக்க வெற்றியாக அமைந்தது.
இதற்கிடையில், சத்தன்னூரில் நடைபெற்ற கடும் போட்டி நிறைந்த தேர்தலில், பாஜக வேட்பாளர் பி.பி. கோபகுமார் தனது போட்டியாளர்களை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்தநிலையில், கேரளாவில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து வலுவாக காலூன்றியுள்ளது. விரைவில் அங்கு நிறைய சட்டமன்ற உறுப்பினர்கள் வருங்காலங்களில் பாஜகவிற்கு கிடைப்பார்கள் என்பது இத்தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது.



