பாஜக அரசின் சாமர்த்திய, அசாத்திய நடவடிக்கைகளினால் மட்டுமே சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டிருக்கிறது. எரிவாயு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மலிவான அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது என பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் (மே 02) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் வணிக சமையல் எரிவாயு உயர்ந்து விட்டதாக ‘குய்யோ முறையோ’ என்று ஒரு சிலர் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஈரான்-அமெரிக்க யுத்ததையடுத்து இந்தியாவில் வீடுகளுக்கான சமையல் 14.2 கிலோ எரிவாயுவின் தற்போதைய விலை ரூபாய். 900 -940 வரை உள்ளது. பிரதம மந்திரி எரிவாயு திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு ரூபாய்.500 -600 வரை கிடைத்து வருகின்றது.
ஈரான் – அமெரிக்க போரையடுத்து வீடுகளுக்கான சமையல் எரிவாயுவின் விலை பல்வேறு நாடுகளில் கிடு கிடுவென உயர்ந்த நிலையில், இந்தியாவில் தான் வீடுகளுக்கான சமையல் எரிவாயு குறைவான விலையில் மக்களுக்கு கிடைக்கப் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டு பயன்பாட்டிற்கான எரிவாயு, இந்தியாவில் ரூபாய் 900-940 க்கு என்ற நிலையில், ரூபாய் மதிப்பில் அமெரிக்காவில் 1500-2200க்கும், பாகிஸ்தானில் ரூபாய் 1100-1400 க்கும், சீனாவில் 1330-1700க்கும், இங்கிலாந்தில் 1800-2500 க்கும், ஜெர்மனியில் ரூபாய் 3500-4500க்கும், ஜப்பான் மற்றும் நார்வேயில் 3500-6000 திற்கும் விற்கப்படுகிறது.
மேலும், மேற்குறிப்பிட்ட நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை தவிர மற்ற நாடுகளில் கடும் தட்டுப்பாடும் நிலவுகிறது என்பதை எதிர்க்கட்சிகள் மறைக்கின்றன. விலையை விட தாராளமாக கிடைக்கிறதா என்பதே மிக முக்கியமானது என்பதை அறிவுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். அதோடு கூட, இந்தியாவில் 33 கோடிக்கும் அதிகமான வீடுகளில் சமையல் எரிவாயு பயன்படுத்தப்படுகின்ற நிலையில், உலகத்திலேயே அதிக வீடுகளுக்கான சமையல் எரிவாயு இணைப்பை கொண்டுள்ள நாடு இந்தியா என்பதை மறந்து விடக்கூடாது.
இந்நிலையில், நேற்று வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு விலை உயர்த்தப்பட்டது குறித்து கடும் விமர்சனங்களை முன் வைக்கின்றன எதிர்க்கட்சிகள்.
இந்தியாவில் தற்போது ரூபாய் 3000-3300 க்கு விற்கப்படுகிற நிலையில், இங்கிலாந்து- ஜெர்மனி போன்ற நாடுகளில் ரூபாய்.4000-7000 திற்கும், ஜப்பானில் ருபாய் 5000-8000 த்திற்கும், சீனாவில் ரூபாய் 2000-4000 வரையிலும் விற்கப்படுகிறது. கடந்த 2014 ம் ஆண்டு, இந்தியாவின் மக்கள்தொகையில் 11 கோடி குடும்பங்களுக்கு மட்டுமே எரிவாயு இணைப்பு இருந்த நிலையில், நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாஜக ஆட்சியில் தற்போது 33 கோடிக்கும் அதிகமான வீடுகளில் (அதாவது இரு மடங்கு) அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல ஏழை எளிய மக்களை விறகு அடுப்பின், கரி அடுப்பின் கொடுமையிலிருந்தும் மீட்ட மாபெரும் சீர்திருத்தம்.
இந்திய அரசு தன் குடிமக்களின் மீதான சுமையை குறைக்க வீட்டு உபயோக எரிவாயு இணைப்புகளின் விலை சுமையை அரசு ஏற்றுக்கொண்டு சாமான்ய மக்களுக்கு அதிக முன்னுரிமை அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.
அதே சமயம், உலகெங்கும் எரிவாயு உற்பத்தி நாடுகளை தவிர மற்ற நாடுகளில் கடும் தட்டுப்பாடு, அதிக விலையேற்றம் உள்ள நிலையில், இந்திய அரசு மிக நுணுக்கமாக, தெளிவாக திட்டமிட்டு செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையால் உடனடியாக பாதிக்கப்படுவது ஒவ்வொரு குடும்பங்கள் தான் என்பதால் வீட்டு உபயோக எரிவாயுவின் விலை உயர்வை தவிர்த்ததோடு, தட்டப்பாடும் இல்லாத நிர்வாகத்தை அளித்துள்ளது இந்திய அரசு.
ஆனால், வணிக பயன்பாட்டிற்கான எரிவாயுவின் விலை அதிகரித்ததும் ஒட்டுமொத்தமான எரிவாயு விலை அதிகரித்து விட்டது போன்ற மாயையை உருவாக்குவது எதிர்க்கட்சிகளின் சதி மட்டுமல்ல, தீய உள்நோக்கமும் கூட. சாமான்ய மக்களின் துயர் துடைத்த பாஜக அரசின் முயற்சியை எதிர்க்கட்சிகள் பாராட்ட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை, ஆனால், உலகெங்கும் உள்ள பிரச்சினையை திறம்பட கையாண்டு வரும் அரசை விமர்சித்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் மலிவான அரசியல் யுக்தி கடும் கண்டனத்திற்குரியது.
பாஜக அரசின் சாமர்த்திய, அசாத்திய நடவடிக்கைகளினால் மட்டுமே சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டிருக்கிறது. இல்லையென்றால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு மற்ற நாடுகளில் உள்ள மக்கள் சந்தித்து வரும் மிகப் பெரும் இடர்பாட்டை, இன்னலை இந்திய மக்கள் சந்தித்திருப்பார்கள்.
நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாஜக அரசுக்கு மக்களின் பாராட்டுகளும், நன்றிகளும்! இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.


