பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின்கீழ் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் பால் உற்பத்தி 70 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
லேயில் (மே 01) நடைபெற்ற பல்வேறு திட்டங்களின் தொடக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவத: பிரதமர் மோடி, நாட்டின் பிரதமராக கடந்த 2014ஆம் ஆண்டில் பதவியேற்றார். இதையடுத்து பால் உற்பத்தி துறையில் மிகப்பெரிய மாற்றம் நடந்துள்ளது. கால்நடை துறை உருவாக்கப்பட்ட பிறகு, பல்வேறு புரட்சிகரமான மாற்றங்கள் நடந்துள்ளன.
2014-15ஆம் ஆண்டில் நாட்டில் பால் உற்பத்தி 143 மில்லியன் டன்னாக இருந்தது. அது 2024-25ஆம் ஆண்டில் 248 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. அதாவது, வெறும் 10 ஆண்டுகளில் பால் உற்பத்தி 70 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த 70 சதவீதத்தில் 50 சதவீத வளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது.
2014இல் தனி நபர் ஒருவருக்கு 307 கிராம் பால் தினமும் கிடைத்தது. அது தற்போது 485 கிராமாக அதிகரித்துள்ளது. சத்துக்கு பால் மிகவும் முக்கியமாகும். குறிப்பாக, குழந்தைகளுக்கு பால் மிகவும் முக்கியமானதாகும்.
நாட்டில் பால் பவுடர் உற்பத்தி 2014-15ஆம் ஆண்டில் 15,000 மெட்ரிக் டன்னாக இருந்தது. அது தற்போது 24,000 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. 2014இல் தனி நபர் ஒருவருக்கு பால் பவுடர் 148 கிராம் கிடைத்தது. அது தற்போது 485 கிராமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கூட்டுறவு பண்ணைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் தற்போது மொத்தம் 2.36 லட்சம் கூட்டுறவு பால் பண்ணைகள் உள்ளன. அதில் 20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 75,000 கூட்டுறவு பால் பண்ணைகள் ஏற்படுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் 21,000க்கும் அதிகமான பண்ணைகள் ஏற்கெனவே உருவாக்கப்பட்டு விட்டன. இதேபோல் ஏற்கெனவே இருக்கும் 46,000 கூட்டுறவு பால் பண்ணைகளை நவீனப்படுத்தும் பணிகளும் நடக்கின்றன என்றார்.
லடாக் பற்றி அவர் பேசுகையில், ‘2019ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் இருந்து லடாக் தனி யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டபிறகு அங்கு மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. லடாக்கில் அரசியல், சமூகம், பொருளாதார ரீதியில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இப்பிராந்தியத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு அதிக முக்கியத்துவம் தருகிறது. ஜம்மு-காஷ்மீரின் அங்கமாக இருந்தபோது, லடாக்கின் பட்ஜெட் ரூ.1,000 கோடியாக இருந்தது. அந்த பட்ஜெட் தற்போது ரூ.6,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது’ என்றார்.


