தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில், திமுக கட்சி பணத்தை நம்பி தேர்தல் களத்தில் இறங்கியுள்ளதாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பல தொகுதிகளில் வாக்காளர்களுக்கு ₹1000 முதல் ₹5000 வரை பணம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக அமைச்சர்கள் மற்றும் முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடும் பகுதிகளில், கட்சி நிர்வாகிகள் மூலம் திட்டமிட்ட பணப்பட்டுவாடா நடைபெறுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
மயிலாப்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் ஆணையத்தின் சோதனையில், ஒரு கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் இந்த விவகாரத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதேபோல் கோவை தெற்கு உள்ளிட்ட பல இடங்களிலும் பண விநியோகம் நடந்ததாக கூறப்படுகிறது.
சில இடங்களில் பொதுமக்களே பணம் வழங்க வந்தவர்களை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன. மேலும், ‘கூப்பன்’ முறைகள் மூலம் வாக்காளர்களை கவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
இந்த விவகாரம் குறித்து பல அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளன. தேர்தல் நேர்மைக்கு கேள்விக்குறி எழுப்பும் இந்த குற்றச்சாட்டுகள் மீது உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.
மோ. வினோத்ராஜா









