---Advertisement---

ஒரு நபருக்காக மொத்த தருமபுரி மக்களையும் தாரை வார்த்த திமுக அரசு

On: February 10, 2026 3:22 PM
Follow Us:
---Advertisement---

தருமபுரியில் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி தனியார் பேருந்து நிலையத்தை அவசரகதியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து ஒட்டுமொத்த மாவட்ட மக்களையும் பல்வேறு இன்னலுக்கு ஆளாக்கியுள்ளார்.

தருமபுரி நகரின் மையப்பகுதியில் கடந்த 1978-ல் தொடங்கப்பட்ட பி.ஆர்.ராஜகோபால் கவுண்டர் பேருந்து நிலையம், சுமார் 5.75 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வந்தது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து ஓசூர், சேலம், கோவை, மதுரை, சென்னை, பெங்களூர், திருப்பதி, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல நகரங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. அது மட்டுமின்றி தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள கிராமங்கள், நகரங்களுக்கும் பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், ஊத்தங்களை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பேருந்துகளில் ஏறி தருமபுரி மையப்பகுதியில் அமைந்துள்ள ராஜகோபால் கவுண்டர் பேருந்து நிலையத்தில் இறங்குவார்கள். அதுபோன்று வரும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், நீதிமன்றம், மருத்துவமனை, ரயில் நிலையம், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு நகரப் பேருந்துகள் மூலமாக செல்வார்கள். மீண்டும் பணி முடித்து அதே பேருந்து நிலையத்திற்கு வந்து தங்களது ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

திடீரென்று கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி இரவோடு, இரவாக தருமபுரி பேருந்து நிலையத்தை திராவிட மாடல் அரசு சேலம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகாமையில் ஏ.ரெட்டிஅள்ளி என்ற பகுதிக்கு மாற்றியது. அப்பகுதி சுற்றியும் பொட்டல்காடாக உள்ளது. அங்கு தனியார் நிலத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் பிப்ரவரி 05ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக அவசரம் அவசரமாக திறந்து வைத்தார்.

தருமபுரி நகரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் இப்பேருந்து நிலையம் அமைந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தருமபுரிக்கு வேலைக்காக வருபவர்கள் பொட்டல்காட்டில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தில் இறக்கிவிடப்பட்டால் அவர்கள் அங்கிருந்து தருமபுரி நகரத்திற்கு வருவதற்கு பேருந்து சேவைகள் கிடையாது. மேலும் பாதுகாப்பிற்காக கூட அங்கு போலீசார் கிடையாது. குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

மேலும் புதிய பேருந்து நிலையத்தில் வந்திறங்கினால் ஆட்டோவில் 150 ரூபாய்க்கும் மேலாக கொடுத்து தருமபுரி நகரப்பகுதிக்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தினமும் கூலி வேலைக்கு வருபவர்கள் ஆட்டோவுக்கே தங்களது வருமானத்தில் முக்கால் பாகத்தை கொடுத்துவிட்டால் தங்களது குடும்பத்தை எப்படி நடத்துவது என்று புலம்பி தவிக்கின்றனர்.

புதிய பேருந்து நிலையம் துவக்கப்பட்ட இடம் ஒரு தனியாருக்கு சொந்தமான இடம். அந்த நபர் பள்ளி, கல்லூரி, சினிமா தியேட்டர், சிட்பண்ட்ஸ் என பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். தற்போது பேருந்து நிலையம் துவக்கப்பட்ட இடத்தை சுற்றியும் அவரது இடம் உள்ளது. இதனால் புதிய பேருந்து நிலையத்தால் மாவட்ட மக்களுக்கு ஒரு சதவீதம் கூட பிரயோஜனம் கிடையாது. மாற்றாக தனியார் நிலத்தின் மதிப்பு மட்டுமே அங்கு உயரும். எனவே தருமபுரி நகரப்பகுதியில் செயல்பட்டு வந்த பேருந்து நிலையத்தை மீண்டும் மக்கள் விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.

வ.தங்கவேல்

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Post

Leave a Comment