காசி தமிழ் சங்கமம் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற உன்னத இலக்கை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது -எந்த சக்தியாலும் நம்மைப் பிரிக்க முடியாது என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் ‘காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி -4.0 டிச. 2 முதல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. இதன் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் (டிசம்பர் 30) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்.முருகன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமக்கோடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழக துணை வேந்தர் அஜித்குமார் சதுர்வேதி மற்றும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமை உரை நிகழ்த்தினார். அவர் ஆற்றிய உரை;
இந்திய நாகரிகத்தின் இரண்டு ஒளி விளக்குகள் -காசியும், தமிழ்நாடும் ஆகும். ஆயிரம் ஆண்டுகளாகத் தொடரும் ஆன்மீக உறவின் பந்தமாக இது திகழ்கிறது. இவை இன்று மீண்டும் ஒன்றாக சங்கமிக்கிறது.
கடந்த நவம்பர் 30-ஆம் தேதி ஒலிபரப்பான “மனதின் குரல்” நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, காசி-தமிழ் சங்கமத்தைப் பற்றி மிக அழகாகப் பேசினார். “தமிழ் கலாச்சாரம் உயர்வானது, தமிழ் மொழி மேன்மையானது, தமிழ் இந்தியாவின் பெருமை” எனக்கூறினார்.
மகாகவி பாரதியார் கூறியபடி,
“கங்கை நதிப் புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்,
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்ஞ்”
என்ற ஒருங்கிணைந்த, ஒற்றுமையான, உறுதியான இந்தியாவை உருவாக்க வழிவகுக்கும் விழாவாக காசி தமிழ் சங்கமம் அமைந்துள்ளது.
பாரதியார் கண்ட கனவு, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையாலும், கூர்மையான திட்டங்களாலும் இன்று நனவாகிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது: காசி தமிழ் சங்கமம் போன்ற நிகழ்வுகள் மூலம், நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தைக் கொண்டாடுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நமது அறிவுசார் பாரம்பரியம், ஆன்மிக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் மீது இதுபோன்ற நிகழ்வுகள் பெருமிதத்தை ஏற்படுத்தும்.
நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த விழாவை பிரதமர் நரேந்திர மோடி தனது தொலைநோக்கு சிந்தனையுடன் நடத்தி வருகிறார்.
அந்தப் பாரம்பரியத்தைத் தொடரும் வகையில், காசியின் கங்கைக் கரையில் தொடங்கி ராமேஸ்வரத்தின் கடற்கரையில் நிறைவடைந்த காசி தமிழ் சங்கமம், ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை வலுப்படுத்துவதுடன், நமது மக்களையும், கலாச்சாரத்தையும், பல நூற்றாண்டுகள் பழமையான உறவுகளையும் ஒன்றிணைத்துள்ளது. இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் நாகரிகத் தொடர்புக்கு பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் புத்துயிர் அளித்துள்ளார்.
காசிக்கும் தமிழகத்துக்கும், காசிக்கும் தென்காசிக்கும், காசிக்கும் மயிலாப்பூருக்கும் இடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த விழா நடைபெறுகிறது.
மகாபாரதம் வாராணாசிக்கும் தமிழகத்துக்கும் இடையிலான தொடர்பை விளக்குகிறது. சங்க இலக்கியத்திலும் காசியின் சிறப்புகளைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு எல்.முருகன் கூறியுள்ளார்.









