பெண் பிள்ளைகளைத் தவிக்கவிட்டுவிட்டு, தன் மகனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து பாடுகிறார் முதல்வர் ஸ்டாலின் என மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் இன்று காலை (நவம்பர் 27) பள்ளிக்கு சென்ற அரசுப்பள்ளி ஆசிரியை படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெண் பிள்ளைகளைத் தவிக்கவிட்டுவிட்டு, தன் மகனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து பாடும் முதல்வர்!
திருமணத்திற்கு மறுத்ததால் தஞ்சாவூரில் பள்ளிக்குச் செல்லும் வழியில் பெண் ஆசிரியர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது.
சில நாட்களுக்கு முன், இராமேஸ்வரத்தில், இதே போல காதலிக்க மறுத்த மாணவி ஒருவர் பள்ளிக்குச் செல்லும் வழியில் கொலை செய்யப்பட்ட ரணம் இன்னும் மனதைவிட்டு அகலாத நிலையில், மீண்டுமொரு கொடூரச் சம்பவம் அதே போல நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. பெண்களின் விருப்பு வெறுப்பை மதிக்கக் கூட திராணியற்றுவிட்டதா திமுக ஆட்சியின் கீழுள்ள தமிழ்ச் சமூகம்? தன்னை மறுக்கும் பெண்ணைக் கொலை செய்யும் அளவிற்குக் குற்றவாளிக்கு தைரியம் அளித்தது சீரழிந்த சட்டம் ஒழுங்கா? அல்லது கைகட்டி வேடிக்கை பார்க்கும் காவல்துறையா?
கற்பழிப்பு, கடத்தல், காதலிக்க மறுத்ததால் கொலை என அனுதினமும் தமிழகத்தில் தொடரும் பெண்களுக்கு எதிரான கொடூரக் குற்றங்களைக் கண்டு, பெண் பிள்ளைகளைப் பெற்றோர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு தவிக்கும் வேளையில், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களோ தனது சொந்த மகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து மடல் வாசித்து மகிழ்கிறார். இந்த லட்சணத்தில் இருந்துகொண்டு, ‘‘அப்பா’’ என்ற பட்டத்திற்கு ஆசைப்படுவது வெட்கக்கேடு! இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

