தமிழக மக்கள் மீது அக்கறையே இல்லாத ஒரு அரசு மீண்டும் தொடரக்கூடாது, தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் என தென்காசியில் நடைபெற்ற ‘‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’’ நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் (நவம்பர் 20) ‘‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’’ பிரச்சார பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக்கூட்டத்திற்கு வருகை புரிந்த மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உரையாற்றியதாவது:
குறிஞ்சியும், முல்லையும், நெய்தலும் இருக்கின்ற வளமான, வலிமையான மாவட்டம் இந்த மாவட்டத்தில் ‘‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’’ 23-ஆம் நாள் இன்று தென்காசியில் நடைபெறுகிறது. இங்கு பார்க்கின்ற ஒவ்வொரு முகங்களும் நான் 40 ஆண்டுகாலம் இப்பகுதியில் சுற்றி, சுற்றி பார்த்த முகங்கள். தமிழ்நாடு முழுவதும் நான் போகிறேன், போகின்ற இடமெல்லாம் இந்த ஆட்சியின் மீது உள்ள வெறுப்பை நம்மீது பாசமாக காட்டுகின்ற ஒரு பாங்கை எல்லா இடங்களிலும் பார்க்கிறேன்.

நிச்சயமாக வருகின்ற தேர்தலில் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், கடையநல்லூர் சட்டமன்றம் உள்ளிட்ட எல்லா தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றப்பெறுவோம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகத்திற்கே விஸ்வகுருவாக வழிகாட்டியாக இருக்கக்கூடிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். அப்படிப்பட்ட தலைவரை பார்த்து கொலை செய்வோம் என்று திமுக மாவட்ட செயலாளர் ஜெயபால் கூறுகிறார்.
இப்படித்தான் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, இந்திராகாந்தி அம்மையார் வரும்போது அவர்களை கல்லால் அடித்து கொலை செய்ய முயற்சித்தனர். எனவே திமுகவை பொறுத்தமட்டில் இதுமாதிரியான ஒரு செயலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் மூன்றரை மாதத்தில் தேர்தல் வர இருக்கிறது. இப்படிப்பட்டவர்களை தேர்தல் முடிந்த பிறகு அதற்கு என்ன வழி என்பதை நாங்கள் நிச்சயமாக செய்து முடிப்போம்.
கேரளாவில் இருந்து அனைத்து கழிவுப்பொருட்களையும் இங்கு கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இங்கு உள்ள அனைத்து குவாரிகளிலும் திமுகவினர் கமிஷன் வாங்கிவிட்டு கேரளாவுக்கு கனிமவளங்களை கொண்டு செல்கின்றனர். அங்கே அதற்கான பணத்தை வாங்கிவிட்டு வெறும் லாரி திரும்பி வரும்போது மருத்துவ கழிவுகளை ஏற்றிக்கொண்டு தென்காசியில் கொண்டு வந்து கொட்டுகின்றனர். ஆனால் நமது முதலமைச்சர் கேரளாவில் உள்ள பினராயன் விஜயனுக்கு மலையாளத்தில் ஓணம் வாழ்த்து சொல்கிறார்.
திமுகவில் நிறைய தேர்தல் அறிக்கையை கொடுத்திருக்கிறார்கள். சங்கரன்கோவிலில் ஜவுளி பூங்கா அமைப்போம் என்று சொன்னார்கள். இதுவரையில் செய்யவில்லை. தென்காசியில் வேளாண்மை சிறப்பு மண்டலம் அமைப்போம் என்றனர். ஆனால் இதுவரையில் இல்லை.
மாம்பழம், எழுமிச்சைப்பழத்திற்கும் இங்கே குளிர்சாதன வசதி ஏற்படுத்தி தருவோம் என்று சொன்னார்கள். இதுவரையில் செய்யவில்லை. கொப்பரை தேங்காய் உலர்சாதனம் செய்வதற்காக தொழிற்சாலை அமைத்து தருவோம் என்றனர். இதுவரையில் செய்யவில்லை.
தென்காசி யானைப்பால் அருகே மேம்பாலம் கட்டித்தருவோம் என்றனர். ஆனால் இல்லை. ஆயிரம் தடுப்பணைகள் கட்டுவோம் என்றனர். இல்லை. பம்பையில் இருந்து அச்சங்கோவில் வரை, வைப்பார் வழியாக சாத்தூர் வரைக்கும் அணை கட்டுவோம் என்றனர். ஒரு தடுப்பணைக்கூட செய்யவில்லை.

தென்காசியில் சட்டக்கல்லூரி, மருத்துவக்கல்லூரி கொண்டுவருவோம் என்றனர். ஆனால் இல்லை. கடந்த ஆட்சியில் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது 11 மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தார். உலகத்திற்கே சிறப்பு வாய்ந்த புளியங்குடி எழுமிச்சைப் பழத்திற்கு புவிசார் குறியீடு வாங்கிக்கொடுத்தது நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். பக்கத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூரில் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு வாங்கிக்கொடுத்தது நமது பிரதமர்.
தேர்தல் வரவேண்டும் என்றால் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். அப்படிப்பட்ட திமுக ஆட்சி முடிவு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு மோசமான ஆட்சியை வீட்டுக்கு விரட்ட வேண்டும் என்பதுதான் நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.
மூன்றாவது முறையாக பிரதமராக இருக்கும் நமது நரேந்திர மோடி அவர்கள் நேற்று கோயம்புத்தூருக்கு வந்தார்கள். தென்னிந்திய இயற்கை வேளாண்மை உற்பத்தி மாநாட்டில் கலந்து கொண்டார்.
தென்காசி மாவட்டத்திற்கு மட்டும் 54 ஆயிரம் விவசாயிகள் ஆண்டு ஒன்றிற்கு ஆறாயிரம் வாங்குகின்றனர். ஒன்றரை லட்சம் வீடுகளுக்கு ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மட்டும் ஆறரை கோடி ரூபாய்க்கு மாணவர்களுக்கு காலர்ஷீப் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் நினைக்கலாம் எல்லாம் மாநில அரசு கொடுக்கிறது என்று மத்திய அரசு கொடுப்பதை மாநில அரசு வழியாக கொடுக்கிறது.
நமது முதலமைச்சர் எதை செய்தாலும் நான் செய்தேன், நான் செய்தேன் என்பது. இப்போது குற்றாலத்தில் இருந்து ராஜபாளையம், செங்கோட்டை வரை போவதற்கு 1200 கோடி ரூபாயில் சாலைகள் போடப்பட்டுள்ளது. இது எல்லாமே மத்திய அரசின் திட்டம். ஒரு லட்சம் பேருக்கு பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் கொடுக்கிறது மத்திய அரசு.
தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் கழிப்பறைகளை நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கொடுத்திருக்கிறார். தென்காசி ரயில் நிலையம் ஏழு கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி விமான நிலையம் 350 கோடி ரூபாயில் பன்னாட்டு விமான நிலையம் போன்று இன்றைக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமைத்து கொடுத்திருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த அளவிற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பார்த்து, பார்த்து தமிழ்நாட்டிற்கு தேவையான நன்மைகளை செய்கிறார்.
பிஹார் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஜெயிக்காது என்றும் இண்டி கூட்டணி ஜெயிக்கும் என்று கூறினர். முதலமைச்சர் ஸ்டாலினும் பிஹாருக்கு சென்று பிரச்சாரம் செய்தார். தேர்தல் முடிவு வந்தது 243 தொகுதிகளில் 202 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப்பெற்றது. இன்று பிஹார் நாளை தமிழ்நாடு! இந்த மாநில மக்கள் மற்றும் இந்த மாவட்ட மக்கள் மீது அக்கறையே இல்லாத ஒரு அரசு மீண்டும் தொடரக்கூடாது, தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்ல வேண்டும். விடை பெறுகிறேன். நன்றி வணக்கம். இவ்வாறு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது உரையை நிறைவு செய்தார்.
மேலும் இது தொடர்பாக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
தென்காசி மண், புனிதமான காசி விஸ்வநாதரின் பாதங்கள் பட்ட புண்ணிய பூமி! அங்கே குற்றாலச் சாரலின் சுகமும், மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில் இருந்து தவழ்ந்து வரும் சில்லென்ற தென்றலும், கண்களுக்கு விருந்தளிக்கும் பசுமை எழில் கொஞ்சும் வயல்வெளிகளும் என்றென்றும் நிறைந்திருந்தன. இந்த மண் பூலோக சொர்க்கபுரியாகத் திகழ்ந்தது; தென்காசி மக்கள் ஆனந்தமாய், நிறைவாய் வாழ்ந்தனர்.
ஆனால், அத்தகைய வரலாற்றுப் பெருமையும், இயற்கை வளமும் கொண்ட மண்ணை, இப்போதைய திமுக அரசு முற்றிலும் அலட்சியத்துடன் கையாண்டது. தென்காசியின் நலன்களைப் புறக்கணித்து, அண்டை மாநிலங்களின் கழிவுகளையும் குப்பைகளையும் கொட்டும் குப்பைத் தொட்டியாகவே மாற்றியது. இதன் விளைவாக, தென்காசி மக்கள் அனுதினமும் சுகாதாரச் சீர்கேட்டாலும், சுற்றுச்சூழல் சீர்கேட்டாலும் பேரவதியுற்று வருகின்றனர்.
இந்த அவல நிலைக்குக் காரணமான, மக்கள் நலனில் அக்கறை இல்லாத இந்த அரசினை, அதன் அலட்சியத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத தென்காசி மக்கள் வெகு விரைவில் இந்த விளம்பர மாடல் அரசை தூக்கியெறிந்து, தங்கள் மண்ணின் மாண்பை மீட்டெடுப்பார்கள் என்பது உறுதி!
இன்றைய யாத்திரையில் தென்காசி மக்கள் கொடுத்த உற்சாக ஆதரவில் திமுக அரசின் மீதான குறைகள் மற்றும் அவர்களின் மக்கள் விரோத செயல்களை அவர்களிடம் எடுத்துரைத்தேன்.
இந்த நிகழ்வில் தமிழக பாஜகவின் மாநில பொதுச் செயலாளர்கள் திரு பொன் பாலகணபதி அவர்கள் மற்றும் திரு. கருப்பு முருகானந்தம், பாஜக தென்காசி மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அதிமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ., கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா, அதிமுக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., செல்வ மோகன்தாஸ் பாண்டியன், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இவ்வாறு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

