பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது மாபெரும் தாக்குதலை இன்று நள்ளிரவு 1.44 மணிக்கு நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 அன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 26 ஹிந்து சுற்றுலாப்பயணிகளை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. சவுதி அரேபியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அனைத்து பயணங்களையும் பாதியில் ரத்து செய்து நாடு திரும்பினார்.
டெல்லி விமான நிலையத்திலேயே ராணுவ அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடி கொடுப்பதற்காக தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மற்றும் முப்படை தலைமை தளபதி, ராணுவ தளபதிகள் என அடுத்தடுத்த ஆலோசனைகளை பிரதமர் நடத்தி முடித்தார்.
மேலும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கும் முழுச் சுதந்திரம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த அறிவித்திருந்தார்.
இதனால் பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை நடத்தும் என உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
அதன்படி மே 6 மற்றும் 7ம் தேதி நாடு முழுவதும் 244 மாவட்டங்களில் போர் ஒத்திகை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்கான ஏற்பாடுகளில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
இந்தநிலையில், யாரும் எதிர்பாராத விதமாக இன்று (மே 07) நள்ளிரவு பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்படி பவல்பூர், முரிட்கே, சியால்கோட், சகாம்ரு, குல்பூர், பிம்பர், கோட்லி மற்றும் முசாபராபாத் ஆகிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும், சியால்கோட், பஹவல்பூர், சக் அம்ரு மற்றும் முரிட்கே உள்ளிட்ட பாகிஸ்தான் நகரங்களிலும் உள்ள பயங்கரவாத முகாம்களில் மட்டும் துல்லிய தாக்குதலை இந்தியா நடத்தி உள்ளது.
இந்நிலையில், இந்த தாக்குதலில் பயங்கராவதிகள் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் பலர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
பஹவல்பூர் மற்றும் முரிட்கே ஆகிய இரண்டு முக்கிய பயங்கரவாத முகாம்களில் மிகப்பெரிய தாக்குதல்கள் பதிவாகி உள்ளன, அங்கு ஒவ்வொரு தளத்திலும் சுமார் 25-30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்திய உளவுத்துறை தற்போது மற்ற இலக்கு முகாம்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சரிபார்த்து வருகிறது.
இந்த தாக்குதலுக்கு ‘‘ஆபரேஷன் சிந்தூர்’’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து நீதி நிலைநாட்டப்பட்டது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், ‘‘பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், நீதி நிலைநாட்டப்பட்டது. ஜெய் ஹிந்த். ஆபரேஷன் சிந்தூர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம் புகட்டிய இந்திய ராணுவத்துக்கு நாட்டு மக்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் சமூக வலைத்தளம் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். மேலும் ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும் பொதுமக்கள் தங்களது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.