காசி தமிழ் சங்கமம் 3.0-இல் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களுக்கு நடத்தப்பட்ட அனுபவப் பகிர்வுக்கான போட்டியில் வெற்றி பெற்ற 46 பேருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
சென்னை ஆளுநர் மாளிகை பாரதியார் மண்டபத்தில் (ஜூன் 17) நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி தலைமை வகித்தார். காசி தமிழ் சங்கமம் நிகழ்வு ஏற்பாட்டாளர்களான மத்திய கல்வித் துறை, சென்னை ஐஐடி, கல்வித் துறையின் கன்சல்டென்ட்ஸ் நிறுவனங்கள், தெற்கு ரயில்வே, மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம், தென்னக பண்பாட்டு மையம், பனாரஸ் ஹிந்துப் பல்கலைக்கழகம், சாஸ்த்ரா சுயநிதிப் பல்கலைக்கழகம், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 13 அமைப்புகளைச் சேர்ந்தவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கௌரவித்தார்.

இந்த நிகழ்வில் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத் துணைத் தலைவர் சுதா சேஷய்யன் சிறப்புரை ஆற்றி பேசியது:
காசி என்பது தமிழகத்தின் பிணைப்பாகும். தமிகத்திலும் அதன் எல்லையிலும் பஞ்ச பூதத்த தலங்களான திருவானைக்காவல் (நீர்), காளஹஸ்தி (காற்று), திருவாரூர், காஞ்சி (நிலம்), திருவண்ணாமலை (நெருப்பு), சிதம்பரம் (ஆகாயம்) ஆகியவற்றை பற்றி பேசுப்படும். ஆனால் இதையும் தாண்டி சிவனுக்கு அகண்ட தலமாக இருப்பது காசி.
காசி தமிழ் சங்கமம் நிகழ்வுக்கு சென்று வரும் குழுக்கள் தற்போது குடும்பங்களாக மாறிவருகின்றனர். வசுதைவ் குடும்பகம் தொடர ஆண்டு முழுவதும் சங்கமம் நிகழ்வுகள் நடைபெற தமிழக ஆளுநர் ஆவண செய்யவேண்டும். இவ்வாறு சுதா சேஷய்யன் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி பேசுகையில்; பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது ஆளுநர் ஆர்.என்.ரவி காசி தமிழ் சங்கமம் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் தொடங்கப்பட்டது. காசி தழிழ் சங்கமம் 3.0-இல் பங்கேற்க ஏராளமானோர் விண்ணப்பித்தனர். இவ்வாறு வி.காமகோடி கூறியுள்ளார்.
நிகழ்ச்சியில் ஆளுநரின் முதன்மைச் செயலர் கிர்லோஷ் குமார், மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் ஆர். சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.