---Advertisement---

இந்தியா – மலேஷியா இடையே வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

On: February 9, 2026 4:54 PM
Follow Us:
---Advertisement---

இந்தியா – மலேஷியா இடையே வர்த்தகம், முதலீடு, ராணுவம், எரிசக்தி, செமிகண்டக்டர் உட்பட முக்கிய துறைகளில் வரலாற்று சிறப்புமிக்க, 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின. பிரதமர் நரேந்திர மோடி நடத்திய உயர்மட்ட பேச்சுக்கு பின், இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், பயங்கரவாதம் விஷயத்தில் சமரசமே இல்லை என, இரு நாடுகளும் கூட்டாக அறிவித்துள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக மலேஷியாவுக்கு (பிப்ரவரி 07) சென்றார். தலைநகர் கோலாலம்பூரில் அவர் தரையிறங்கியதும், சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், விமான நிலையத்திற்கு நேரில் வந்து மோடியை வரவேற்றார். அத்துடன் ஒரே காரில் இருவரும் பயணித்தனர்.

மலேஷியாவில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். அப்போது, இந்திய கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்ட நடன நிகழ்ச்சிகளும் நடந்தன.
இதைத்தொடர்ந்து இரண்டாவது நாளான (பிப்ரவரி 08) இரு நாட்டு தலைவர்களும் உயர்மட்ட பேச்சு நடத்தினர்.

அப்போது, சினிமா தயாரிப்பு, பேரிடர் மேலாண்மை, ஊழல் ஒழிப்பு, ஐ.நா., அமைதிப்படையில் இணைந்து செயல்படுவது, வன விலங்கு பாதுகாப்பு, தொழிலாளர் நலன், தேசிய பாதுகாப்பு, மருத்துவ சேவை உட்பட 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில் கையெழுத்தாகின. குறிப்பாக செமிகண்டக்டர் துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவு எடுக்கப்பட்டது.

இரு நாட்டு வர்த்தகத்தையும் இந்திய ரூபாய் மற்றும் மலேஷிய கரன்சியான ரிங்கிட்டில் மேற்கொள்ளவும், தலைவர்கள் ஒப்புக் கொண்டனர். இந்திய – மலேஷிய நட்புறவை வலுப்படுத்தும் வகையில் இந்திய துணை தூதரகத்தை, அந்நாட்டில் அமைக்கப் போவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியா – மலேஷியா இடையே பரஸ்பர நம்பிக்கை ஆழமாக நிலவுகிறது. அந்த நம்பிக்கை பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுத்து கொடுத்துள்ளது. இரு நாடுகளும் கடல்சார் நட்பு நாடுகள். பல நூற்றாண்டுகளாக இரு நாட்டு மக்களிடையே நல்ல நட்புறவு நீடிக்கிறது. இரு தரப்புக்கும் இடையே பயங்கரவாத முறியடிப்பு, உளவு தகவல்கள் பகிர்வு, கடல்சார் பாதுகாப்பு போன்றவற்றை வலுப்படுத்தவும் முடிவு செய்துள்ளோம்.

ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன், செமிகண்டக்டர், சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு துறையிலும் நட்புறவை வலுப்படுத்த உள்ளோம். இரு நாடுகளின் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கான அமைப்பில் பேச்சுக்கள் நடந்து வருகின்றன.

இதன் மூலம் வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறையில் புதிய வாய்ப்புகள் உருவாகப் போகிறது. உலகின் வளர்ச்சிக்கான, ‘இன்ஜினாக’ இந்தோ – பசிபிக் பிராந்தியம் மிளிர்ந்து வருகிறது. மலேஷியா போன்ற நட்பு நாடுகள் மூலம், ‘ஆசியான்’ கூட்டமைப்பு நாடுகளுடன் இந்தியாவின் உறவு விரிவடைந்து வருகிறது.

ஆசியான் – இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை சீராய்வு செய்வது குறித்து இருவரும் ஒப்புக் கொண்டுள்ளோம். விரைவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

மலேஷிய பிரதமருடன் நடந்த பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் தொடர்பான பேச்சுக்கள் அர்த்தமுள்ளதாக அமைந்தன. சர்வதேச அளவில் ஸ்திரமற்ற சூழல் நிலவுகிறது. இந்த சமயத்தில் இந்தியா – மலேஷியா இடையே வளரும் நட்புறவு இரு நாட்டுக்கும் மிக முக்கியமானது.

உலகளாவிய அமைதிக்கு இரு நாடுகளும் உறுதுணையாக இருக்கும். பயங்கரவாத விஷயத்தில் எங்களது நிலைப்பாடு மிகவும் தெளிவானது. இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமே இல்லை. பயங்கரவாதம் விஷயத்தில் எந்த சமரசமும் கிடையாது. பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும், அதை இரு நாடுகளும் வன்மையாக கண்டிக்கின்றன. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறுகையில்; இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, மலேஷியாவுக்கு மிகுந்த பயன் அளிக்கும். பல்வேறு துறைகளில் வாய்ப்புகளை திறந்து விட்டு உள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் வர்த்தகத்தில் இந்தியா படுவேகமாக முன்னேறி வருகிறது. இந்த சூழலில் உள்ளூர் கரன்சியில் இருதரப்பு வர்த்தகத்தை மேற்கொள்ள முடிவெடுத்திருப்பது பாராட்டத்தக்கது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு, மலேஷியா ஆதரவு அளிக்கும். இவ்வாறு மலேஷியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறியுள்ளார்.

நேதாஜி படை வீரருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு :

மலேஷியா சென்ற பிரதமர் மோடி, நேதாஜி சுபாஷ் சந்திர போசின் இந்திய தேசிய படையில் இணைந்து நாட்டுக்கு சேவையாற்றிய பழம்பெரும் வீரர் ஜெயராஜ் ராஜா ராவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது அவரிடம், ‘‘நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். இந்திய தேசிய படையான ஐ.என்.ஏ.,வை அவர் துவக்கியது, இந்தியாவுக்கு பெரும் உதவியாக இருந்தது. நேதாஜி படை வீரரான உங்களை சந்தித்தது மிகவும் விசேஷமானது,’’ என்றார்.

விருந்தில் எம்.ஜி.ஆர்., பாடல்:

பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் நேற்று விருந்து அளித்தார். அப்போது, தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நடித்த, நாளை நமதே திரைப்படத்தில் வரும், ‘நாளை நமதே’ பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்டது.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: மலேஷிய பிரதமரும், என் நண்பருமான அன்வர் இப்ராஹிம் எனக்கு விருந்து அளித்தார். அப்போது மகத்தான தலைவர் எம்.ஜி.ஆர்., நடித்த, நாளை நமதே திரைப்படத்தின் பாடல் ஒலித்தது. நம்மை போல, மலேஷிய பிரதமர் அன்வரும் எம்.ஜி.ஆர்., ரசிகர் தான். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

கோலாலம்பூரில் இந்திய வம்சாவளி மலேஷிய அமைச்சர்கள், எம்.பி.,க்கள், செனட் உறுப்பினர்கள் ஆகியோரையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். அப்போது, இரு நாட்டுக்கும் இடையே நட்புறவை வளர்ப்பதில், அவர்கள் அளித்து வரும் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்தார்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment