கடந்த அதிமுக ஆட்சியில் உருவான திருப்பத்தூர் மாவட்டம் என்பதால் திமுக அரசு கண்டுக்கொள்வதில்லை என மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ‘‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’’ நிகழ்ச்சி (நவம்பர் 10) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:
திருப்பத்தூர் மாவட்டம் 10 ஊர்களில் 8 திசைகளில் ஆதியூர் முதல் கோடியூர் வரை இருக்கின்ற திருத்தலங்களை அதற்கு திரு என்ற அடைமொழி கொடுத்து திருப்பத்தூராக மறுவியிருக்கின்ற திருப்பத்தூர் மாவட்ட மக்களை நான் அன்போடு வணங்குகிறேன். நேசிக்கிறேன்.

இந்த வாணியம்பாடி பகுதியில் இருக்கின்ற ஜவ்வாது மலை, ஏலகிரி மலை சந்தனம் மனக்கும் இந்த அழகிய பகுதிகளில் ஆம்பூர் பிரியாணியும் மனக்கும்.
கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக அரசு இந்த மாவட்டத்தை கண்டுகொள்ளவே இல்லை. ஜவ்வாது மலையில், புங்கப்பட்டு நாடு, புது நாடு, நெல்லிவாசல் நாடு இந்த மூன்று நாடுகளில் 226 கிராமங்கள் இருக்கிறது. அங்கே சாலை வசதிகள், மருத்துவ வசதிகள் இல்லை. அங்கே ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது. ஆனால் அங்கே மருத்துவர்கள் இல்லை. ஏலகிரி மலையில் 14 கிராமங்கள் உள்ளது. அங்கே இருளர்கள், பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. இந்த மாவட்டத்தில் ஓடுகின்ற ஆறுகளில் சாக்கடையின் கழிவுநீர் ஓடும் இடமாக இருக்கிறது.
அவ்வளவு மோசமான நிலைக்கு இன்றைக்கு திருப்பத்தூர் மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் பிரிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ஏன் செய்ய வேண்டும் என்ற நோக்கம்தானே தவிர வேற நோக்கம் கிடையாது.
ஆனால் திமுக அரசு எதையாவது பொய்யை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இன்றைக்கு தோல்வி பயத்தில் திமுக உள்ளது. கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 9 ஆயிரம் போலி வாக்காளர்களை சேர்த்து வைத்திருக்கிறார்கள். அது கண்டுப்பிடிக்கப்படும். முதலமைச்சர் தொகுதியிலேயே போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் நாட்டிற்கு ஒரு முதலமைச்சருக்கு அவமானமாக இருக்கும் என்பதற்காக இன்றைக்கு ஒரு நாடகமாடுகிறார்கள்.
இன்றைக்கு பிஹார் தேர்தல் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பிஹார் தேர்தல் முடிந்து ஒரு கருத்துக்கணிப்பு முடிவு வந்திருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி பிஹார் மாநிலத்தை கைப்பற்றும். பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கைப்பற்றுவார்கள் என்ற பத்திரிகை செய்தி வந்திருக்கிறது.
ஆனால் தமிழ்நாட்டில் எதை, எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். இன்றைக்கு மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியை மாற்றுகின்ற மனமாற்றமாக அமையப்போகிறது. அதைதான் இன்றைக்கு வாணியம்பாடி மக்கள் இவ்வளவு கூட்டமாக கூடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு வீடியோவில் துரைமுருகன் பேசினார்கள். ராஜராஜ சோழனுக்கு பிறகு ராஜேந்திர சோழன் இந்த நாட்டை ஆளவில்லையா? அது மன்னராட்சி, இது மக்களாட்சி.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., மற்றும் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆண்டு பூமி. அண்ணன் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருக்கின்றபோது 40 ஆயிரம் கோடிக்கு பல நல்ல திட்டங்களை தந்தது மத்திய அரசு. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மகப்பேறு மரணங்கள் தமிழ்நாட்டின் சதவீதத்தை விட அதிகமாக நடைபெறுகிறது. இங்கே காடுகள் அதிகமாக இருக்கிறது. பாம்புக்கடி, நாய்க்கடிக்கு எல்லாம் மருந்துகள் கிடையாது. இங்கு பராமரிப்பு இல்லாத ஒரு மாவட்டமாக திருப்பத்தூர் இருக்கிறது.
எல்லாம் அடிப்படை வசதிகள் கிடைப்பதற்கு நீங்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராக வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றிபபெற செய்ய வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: பிரம்மாவின் கோபத்தால் பேசும் திறன் பறிக்கப்பட்ட சரஸ்வதி தேவியை, மீண்டும் பேச வைத்தார் சிவபெருமான். இதற்காக இறைவனின் புகழைப் பாடினார் வாணி தேவியார். ‘வாணியம்மை பாடியது’ என்பது நாளைடவில் ‘‘வாணியம்பாடி’’ என மாறிய புராண வரலாறும், வணிகர்கள் தங்களது வணிகப் பொருட்களை பாதுகாக்க ‘பாடி’ அமைத்த இடம் என்பதனாலும் ‘‘வாணியம்பாடி’’ என பெயர் பெற்ற வரலாறையும் கொண்ட இந்த மண்ணில் ‘‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’’, 17ம் நாள் இன்று.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பாதையிலே… தமிழகத்திலும் திருப்புமுனை ஏற்பட்டு, திகைக்க வைக்கப்போகும் நலத்திட்டங்களால், திரும்பும் திசைகள் எல்லாம் வளர்ச்சியின் மலர்ச்சி என்பது காதுகளை வந்தடையப் போகும் காலம் குறுகிய தூரத்திலே… என்ற தித்திப்பான செய்தி திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து தெரியப்படுத்தப்படுகிறது.
இன்றைய கூட்டத்தில், தமிழ்நாடு பாஜகவின் மாநில பொதுச்செயலாளர்கள் கார்த்தியாயினி, கருப்பு முருகானந்தம், மாநில செயலாளர் கொ.வெங்கடேசன், திருப்பத்தூர் மாவட்ட பாஜக தலைவர் தண்டாயுதபாணி, அதிமுக திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

