பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது என பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார்.
தருமபுரி நகரில் தொழில்முறை சந்திப்பு கூட்டம் (ஜூன் 18) பாஜக மாவட்டத் தலைவர் சி.சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்டத்தை சார்ந்த மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கலந்து கொண்டு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 11 ஆண்டுகால சாதனைகள் குறித்து எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா கூறியதாவது: பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான வரிசையில் கழிப்பறைகள், 105 கோடி வங்கி கணக்குகள் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. அதேபோல, அரசின் உதவித் தொகைகள், மானிய திட்டங்கள் நேரடியாக பயனாளிகளுக்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதால், கடந்த 11 ஆண்டுகளில் 3 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு மிச்சமாகியுள்ளது.
தொழில்துறையில், 3.6 கோடி ரூபாயாக இருந்த சிறு, குறு தொழில்கள், 6.1 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுதவிர, சாலை வசதி, மருத்துவ கல்லூரிகள், மெட்ரோ ரயில் திட்டம் என, பல ஆயிரம் கோடி ரூபாயில் தமிழகத்தில் பணிகள் நடந்து வருகிறது.
சட்டசபை தேர்தலில் தி.மு.க.,-வை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு அ.தி.மு.க., தலைமையில் ஆட்சி அமையும். அதற்காக தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பா.ஜ.க., தலைமையிலான மத்திய அரசின் 11 ஆண்டுகால சாதனைகளை கடைக்கோடி மக்களிடமும் கொண்டு செல்வோம். இவ்வாறு எஸ்.ஜி.சூர்யா கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் ஒரே நாடு மாநில செய்தியாளர் வ.தங்கவேல், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் வரதராஜ், பூபதி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் கணேசன், பிரவின், சங்கீதா, மாவட்ட செயலாளர்கள் வித்யா, கிருஷ்ணவேனி, மதியழகன், மாதன், மாவடத்துணைத்தலைவர் பொன்னுசாமி, நகரத் தலைவர் சாய் ஆறுமுகம், நகர பொதுச்செயலாளர் பிரபாகரன், ஐடி பிரிவு மாநில செயலாளர் ஜெய்சூர்யா உட்பட பல்வேறு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.