தொப்பூர் மலைப்பாதையில் தொடர் விபத்துகளை தடுப்பதற்காக உயர் மட்ட மேம்பாலம் அமைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ரூ.775 கோடி நிதி ஒதுக்கியது. தற்போது தூண் அமைக்கும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரியை இணைக்கும் மிக முக்கிய சாலைகளில் ஒன்றாக ஓசூர், தருமபுரி, சேலம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை என்.எச்., 44 அமைந்துள்ளது. இதில், தருமபுரி மாவட்டம் தொப்பூர் மலைப்பாதை பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்-பட்டு வருகிறது.
குறிப்பாக, தொப்பூர் மலைப்பாதையில், 8 கி.மீ., தாழ்வாகவும், வளைவாகவும் அமைக்கப்பட்ட சாலையால் அடிக்கடி விபத்து நடந்து பல உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக தொப்பூர் மலைப்பாதையில், 2010 முதல், 2024 வரை நடந்த, 952 விபத்துக்களில், 310 பேர் பலியாகியும், 1,000 பேர் படுகாயமும் அடைந்தனர். இதை தடுக்க, உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட மக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். மேலும், அப்போதைய தருமபுரி முன்னாள் எம்.பி., அன்புமணி ராமதாஸ் மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.
இதையடுத்து, தொப்பூர் மலைப்பாதையில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க மத்திய அரசால் 775 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான டெண்டர் விடப்பட்டது.
இந்தநிலையில், தொப்பூர் புதிய மூன்று வழி உயர் மட்ட மேம்பால பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 35 மீட்டர் உயரம் கொண்ட ராட்சத தூண்களின் கட்டுமானப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்பணி முடிக்கப்பட்டால் தொப்பூர் கணவாய் பகுதியை விபத்து இன்றி வாகன ஓட்டிகள் எளிதாக கடந்துசெல்ல முடியும். பாலம் அமைக்க நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
வ.தங்கவேல்

