கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது பிடிப்பட்ட 4 கோடி ரூபாய் வழக்கு விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை ஊடகங்களுக்கு வெளியிடும் சிபிசிஐடி ஐ.ஜி., எஸ்.பி., டி.எஸ்.பி., மற்றும் அதனை செய்தியாக வெளியிடும் சன்நியூஸ், புதிய தலைமுறை தொலைக்காட்சிகளுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக மாநிலத்துணைத் தலைவரும், வழக்கறிஞருமான பால்கனகராஜ் நோட்டீஸ் தொடர்பாக ஒரே நாடு பத்திரிகைக்கு கூறியிருப்பதாவது:
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திருநெல்வேலி பாராளுமன்றத் தொகுதியில் நயினார் நாகேந்திரன் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார். அப்போது 6.04.2024 அன்று தாம்பரம் ரயில் நிலையத்தில் சுமார் 4 கோடி ரூபாய் வைத்திருந்ததாக மூன்று நபர்களை தேர்தல் அதிகாரிகள் பிடித்தனர்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் நயினார் நாகேந்திரன் அவர்கள் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு கொண்டுசெல்லப்படும் பணம் என்று அந்த நபர்கள் தெரிவித்ததாக பொய்யான குற்றச்சாட்டை அரசியல் நோக்கத்துடன் அந்த வழக்கை தாம்பரம் போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருந்தனர். பின்னர் அந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை சென்னையில் உள்ள சிபிசிஐடி டிஎஸ்பி விசாரணைக்காக எடுத்துக்கொண்டார். அந்த வழக்கில் பிடிப்பட்ட மூன்று நபர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அவர்கள் சொன்ன வாக்குமூலத்தின் அடிப்படையிலே அப்பணம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, யார் கொடுத்தார்கள் என்றெல்லாம் டிஎஸ்பி விசாரணை செய்தார்.
இதற்கிடையே உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் எல்லாம் நெருக்கப்படுகிறார்கள், அவர்களின் செல்போன்கள் எல்லாம் கேட்கிறார்கள் எனக்கூறப்பட்டதை தொடர்ந்து அதை கொடுக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனை எதிர்த்து சிபிசிஐடி சார்பில் உச்ச நீதிமன்றம் சென்றனர். இவ்வாறு விசாரணை நடந்துக்கொண்டிருக்கும்போது தற்போதைய தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களையும் விசாரணை செய்தார்கள். அவர் தெளிவாக கூறிவிட்டார். இந்தப் பணம் எனக்கு சம்மந்தப்பட்டது அல்ல தேர்தலுக்காக கொண்டுவரப்பட்டது என்று சொல்வது எல்லாம் உண்மைக்கு புறம்பானது. அந்த பணத்தை வேறு ஒருவர் தனது எனக்கூறியிருக்கிறார்.
எனவே இது தேர்தலுக்காக போடப்பட்ட வழக்கு ஆகும். ஆளும் திமுக அரசால் தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டை வாக்குமூலமாக பதிவு செய்து பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் எல்லோரையும் அவமானப்படுத்துகிறார்கள் என்றெல்லாம் வாக்குமூலம் கொடுத்து விட்டார்.
இந்த சூழ்நிலையில் பணம் பிடிப்பட்ட வழக்கு சம்மந்தமாக வேறு யாராவதை கைது செய்தால் அல்லது விசாரணைக்கு உட்படுத்தினால் இந்த சிபிசிஐடி காவல்துறை என்ன செய்கிறது என்று சொன்னால், காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகு அத்துறை சார்பில் ஒரு அறிக்கை ஒன்றை ஊடகத்திடம் கொடுக்கிறார்கள்.
காவல்துறை சார்பில் ஊடகங்களிடம் கொடுக்கப்படும் அறிக்கை; உதாரணத்திற்கு சன்நியூஸ், புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள் எல்லாம் இச்செய்தியை வெளியிடும் போது நான்கு கோடி விவகாரம், தேர்தலுக்காக வழங்குவதற்காக பிடிப்பட்ட பணம் என்று நயினார் நாகேந்திரன் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகியபோது எடுத்த வீடியோ காட்சிகளை இணைத்து ஒரு தொடர் கதையாக சொல்லிக்கொண்டு வருகின்றனர்.
இதை தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் வழக்கறிஞர்கள் சார்பில் சிபிசிஐடி ஐஜி, எஸ்.பி., டி.எஸ்.பி., ஆகியோர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார். தற்போது டி.எஸ்.பி.,தான் புலன் விசாரணை அதிகாரியாக உள்ளார். அது மட்டுமின்றி சன்நியூஸ், புதிய தலைமுறை தொலைக்காட்சிகளுக்கும் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
அந்த நோட்டீஸில் என்ன சொல்கிறார் என்றால், இங்க பாருங்க என்னை கூப்பிட்டாங்க, விசாரணை செய்தார்கள். அதற்கு இப்பணத்திற்கும் எனக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று நான் தெளிவாக பதில் சொல்லிவிட்டேன். தேர்தல் நேரத்தின் போது எந்த பணம் கைப்பற்றப்பட்டாலும் அதை யாரு மேல வேண்டுமானாலும் அவர்களுக்காக கொண்டு செல்லப்படுகிற பணம் என்று சொல்லலாம். எனவே கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அதை கொடுத்தவர்களுக்கும் தொடர்பு இல்லை என நயினார் நாகேந்திரன் நிருபித்துவிட்டு வந்துவிட்டார்.
தொடர்ந்து அந்த வழக்கில் நயினார் நாகேந்திரன் ஆஜராகி விளக்கம் சொன்ன பிறகும் கூட அவரைப்பற்றி தவறாக சொன்னதால் தற்போது சிபிசிஐடி ஐஜி, எஸ்.பி., டி.எஸ்.பி., சன்நியூஸ், புதிய தலைமுறை உள்ளிட்டோருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
இந்த நோட்டீஸில் நயினார் நாகேந்திரன் கூறும்போது; வழக்கு விசாரணை செய்யுங்க, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுங்க, நீதிமன்றத்தில் வாதாடுங்க, அதைவிடுத்து மீடியா முன்பு விசாரணை நடத்தக்கூடாது. தேவையின்றி எனது படத்தை போட்டு பொதுமக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை கொண்டு சேர்க்கக்கூடாது.
வேண்டும் என்றே காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு, பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான பிறகு வேண்டும் என்றே அந்த வழக்கில் அழுத்தம் கொடுத்து அவரது பெயரையும், புகழையும் கெடுக்கின்ற வகையிலே தொடர்ந்து தொலைக்காட்சிகளில் புகைப்படத்தை போட்டு அவதூறை பரப்புகிறார்கள். எனவே இதுபோன்று தவறான செய்திகளை வெளியிடுவதற்கு காவல்துறை அறிக்கை கொடுக்கக்கூடாது. இதை கவனிக்க தவறிய ஐஜி, எஸ்.பி., டி.எஸ்.பி., ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொய்யான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் நிறுத்த வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றத்தில் உரிய பரிகாரத்தை பெறுவேன் என நோட்டீஸில் கூறியுள்ளார்.
இதுபோன்ற வழக்குகளில் காவல்துறை மற்றும் மீடியா ஆகியோர் நீதிமன்ற விசாரணை நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே கூறியுள்ளது. அப்படி மீறி புகைப்படத்தை இந்த விசாரணை வழக்கில் வேண்டும் என்றே இணைத்து செய்தி வெளியிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு பால்கனகராஜ் கூறியுள்ளார்.