துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் 15வது துணை ஜனாதிபதிக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணி சார்பில் போட்டியிட்ட பி. சுதர்சன் ரெட்டி, 300 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.
இந்தநிலையில், டெல்லியில் மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இல்லத்தில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணனை பிரதமர் நரேந்திர மோடி நேரில் வாழ்த்தினார்.
இந்திய அரசியல் சாசனத்தில் இரண்டாவது மிகப்பெரிய பொறுப்பான துணை ஜனாதிபதி பதவியில் சிறப்புற செயல்பட சி.பி.ராதாகிருஷ்ணனுக்குப் பூங்கொத்து கொடுத்துப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளதாவது, துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். சமூகத்திற்கு சேவை செய்வதற்கும் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் அவரது வாழ்க்கை எப்போதும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் நமது அரசியலமைப்பு மதிப்புகளை வலுப்படுத்தி, நாடாளுமன்ற விவாதத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த துணைத் தலைவராக இருப்பார் என்று நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.