தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 08) வெளியானது. அதன்படி மொத்தம் 7.53 லட்சம் மாணவர்கள் (95.20 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 4,06,167 பேர் (97 சதவீதம்). தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 3,47,527 பேர் (93.19 சதவீதம்)
இந்த முறையும் வழக்கம்போலவே தேர்ச்சி விகிதத்தில் மாணவிகளே அதிகம் இடம்பெற்றுள்ளனர். மாணவர்களை விட 3.81 சதவீதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
இந்த தேர்வில் பங்கெடுத்த மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7,536. இதில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் 2,639. இதில் அரசுப் பள்ளிகள் 489.
தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு, சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளன.
ஈரோடு – 98.87 சதவீதம்
சிவகங்கை – 98.05 சதவீதம்
கன்னியாகுமர் – 97.63 சதவீதம்
நெல்லை – 97.54 சதவீதம்
திருச்சி – 97 சதவீதம்
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2 முதல் மார்ச் 26-ம் தேதி வரை நடைபெற்றது. 3,412 மையங்களில் 8.27 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 150-க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த ஏப்ரல்6 முதல் ஏப்ரல்20-ம் தேதி வரை நடைபெற்றது.
மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தங்களது பிறந்த தேதி, பதிவு எண் ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறியலாம்.
பள்ளி மாணவர்கள் உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்ட செல்போன் எண் மற்றும் தனித் தேர்வர்கள் இணையவழியில் விண்ணப்பித்தபோது வழங்கிய செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
தமிழ்நாடு மின்ஆளுமை முகமை மூலம் வாட்ஸ்அப் செயலியில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி,78452 52525 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ‘Hi’ என்று குறுந்தகவல் அனுப்பி, அடுத்தடுத்து துறை பெயர், தேர்வர்களின் வகுப்பு, தேர்வு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவிட்டு, தேர்வு முடிவுகளை அறியலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொள்ளலாம்.



