
தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் (DOTE) கீழ் சென்னை தரமணியில் 1964 முதல் CIT வளாகத்தில் இயங்கும் 10க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களில் உள்கட்டமைப்பு, சுகாதாரம், மாணவர்களுக்கு வழங்கும் உணவு என்று எதிலும் தரமில்லை என்று தகவல் வெளியாகியுள்ளன. மொத்தம் 8,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்ற சென்னையின் மையப்பகுதியில் இருக்கின்ற கல்வி நிலையத்தில் இப்படியொரு அவலநிலை தொடர்கிறது என்பது வருத்தமே.
குறிப்பாக, சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர் என்று பலரும் அறிந்ததே. ஆனால், அவர்களுக்கு கல்வி சிறப்பான முறையில் வழங்கிட போதிய அடிப்படை வசதிகளை கொடுக்க தமிழக அரசுக்கு மனமில்லை என்று பலர் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். அதில் படிக்கும் மாணவர்கள் “ஆய்வகங்களில் மேஜை கிடையாது, செய்முறைத் தேர்வுகளின் போது நாங்கள் நீண்ட நேரம் நிற்கிறோம், இதனால் எங்கள் கால்கள் வலிக்கிறது” என்று வருத்தம். மற்றொரு மாணவர் கூறுகையில், ஆய்வகங்களிலுள்ள கணினிகள் பழுதடைந்துள்ளது என்றும், வேதியியல் ஆய்வகங்களில் உபயோகிக்கப்படும் சாதனங்கள் உடைந்த நிலையில் இருக்கிறது என்று புகார்.
அதே வளாகத்திலுள்ள Institute of Printing Technology என்ற கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர் ஒருவர், வகுப்பறையில் தான் இவ்வளவு பிரச்சனை என்றால், தங்கும் விடுதியின் நிலைமை இன்னும் மோசமே; உண்ணும் உணவில் இறந்த நிலையில் தவளை மற்றும் பூச்சிகள் இருக்கின்றன அதனால் சில நாட்கள் அந்த உணவை சாப்பிடாமல் நாங்கள் பசியோடு இருந்திருக்கின்றோம் என்று மனவேதனையுடன் இதைக் கூறியுள்ளார். இதுமட்டுமல்லாமல் மாணவர் சேர்க்கையின் போது பெற்றோர்களிடம் புதிய கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது, விரைவில் வகுப்பறைகள் அங்கு மாற்றப்பபடும் என்று கல்வி நிர்வாகம் வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை அதை நடைமுறைப்படுத்தவில்லை.
அவ்வளாகத்தில் உள்ள ஒரு கல்வி நிலையத்தின் தலைமையாசிரியர் கூறுகையில், நிதி பற்றாக்குறை, மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகளின் தாமமே இதற்கு முக்கியக் காரணம் என்று கூறியுள்ளார். இந்த கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்கள் சிறந்து விளங்கியும், உபகரணங்கள் புதுப்பிக்கவோ அல்லது பழுதுபார்க்கவோ நிதி தருவதில்லை, மேலும் கூறுகையில், மாணவர்களின் கட்டணத்தை வைத்து தான் பராமரிப்பு செலவுகள் மேற்கொள்ளகிறோம், அரசின் சார்பில் எந்த ஒரு உதவியும் இல்லை என்றார்.
இதற்கு முக்கியத் துறை அதிகாரிகளை அணுகிய போது அவர்கள் மாற்றி மாற்றி பழிசுமத்துகின்றனர். இதற்கு DOTE அதிகாரிகள் கூறுகையில் ₹94 கோடியில் திட்டம் செயல்படுத்த இருக்கிறோம் அதனால் மற்ற திட்டங்கள் நடைமுறைக்கு வராமல் இருக்கிறது என்று புதிய விளக்கத்தை கூறி வருகின்றனர். கல்லூரி நிலையங்கள் இப்படி இருக்கும் சூழலில் கோடிகளில் விளம்பரம் செய்யும் திமுக அரசு எப்போது கண்விழித்துக் கொள்ளும் என்று பலர் கேள்வியை முன்வைத்து வருகின்றனர்.





