தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதியையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிப்பெற்றதால்தான் இம்மாவட்டத்தை திமுக வஞ்சிக்கிறது என மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் (நவம்பர் 08) மாநிலத் தலைவரின் ‘‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’’ 16ஆம் நாள் பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களை ஒரே நாடு மாநில செய்தியாளர் வ.தங்கவேல் ‘ஒரே நாடு’ இதழை வழங்கி வரவேற்றார். அப்போது ஒரே நாடு இதழில் வெளியாகும் செய்திகள் அருமையாக உள்ளது என்று தலைவர் நயினார் நாகேந்திரன் பாராட்டினார்.
இதனையடுத்து தருமபுரி சோகத்தூர் மேம்பாலம் அருகில் மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் பாஜக நிர்வாகிகள் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களை பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

இதனைத்தொடர்ந்து மாவட்ட பாஜக அலுவலகத்திற்கு சென்ற தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு முன்னாள் மாவட்டத் தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினருமான பாஸ்கரன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். அதனைத்தொடர்ந்து மாவட்ட அலுவலகத்திற்கு சென்ற தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு மகளிர் அணி மாவட்ட தலைவர் கலையரசி உள்ளிட்டோர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
இதனைத்தொடர்ந்து குரும்பட்டியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் பங்கேற்று விவசாயிகளின் கோரிக்கைகளை தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டறிந்தார்.
அதனை முடித்துக்கொண்டு தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக அமைக்கப்பட்ட மேடைக்கு வருகை புரிந்த தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு பாஜக மற்றும் அதிமுகவினர் தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தநிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உரையாற்றியதாவது: தமிழகம் தலைநிமிர தமிழனின் எழுச்சிப் பயணத்தின் 16வது நாள். தருமபுரி மிக, மிக முக்கியமான மாவட்டம் ஆகும். எப்படி அமெரிக்கா நீர்வீழ்ச்சி நயாகரா உலக பிரசித்திப்பெற்றதா அதே போன்று ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி என்பது உலக பிரசித்திப்பெற்ற நீர்வீழ்ச்சி என்பதை யாரும் மறக்க முடியாது.
செந்தூரம் என்று சொன்னாலே இனிக்கும். அப்படிப்பட்ட இந்த மண்ணில் அதிகமாக விளைச்சல் உள்ள மாம்பழத்திற்கு ஆதாரவிலை இல்லாததால், மாழ்பழத்தை சாலையிலும், ஆற்றிலும் கொட்டக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.
அதுமட்டுமின்றி மரவள்ளிக்கிழங்குக்கு ஆதாரவிலை தருவோம் என்று சொன்னார்கள். ஆனால் இன்றைக்கு வரலாறு காணாத வீழ்ச்சி மாம்பழத்திற்கும், மரவள்ளி கிழங்கிற்கும் வந்திருக்கிறது என்று சொன்னால் அது விவசாயிகளுக்கு இழைக்கும் கண்ணீர் ஆட்சியாக இந்த ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
குரும்பட்டி கிராம விவசாயிகள் சொன்னார்கள், நாங்கள் எல்லா இடங்களுக்கும் மரவள்ளி கிழங்குகளை கொண்டுசெல்ல முடியவில்லை. லாரிகளுக்கு வாடகை கொடுக்க முடியவில்லை. எனவே எங்களுக்கு கிடங்கு அமைத்து அவர்கள் எடுத்துச்செல்ல வேண்டும் என சொன்னார்கள்.
50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்ணீரும், கம்பளமாக இருக்கின்றனர். இதில் நாடு போற்றும் நல்லாட்சி என்று சொல்லுகிறார்கள். காய்கனி சார்ந்த இந்த மாவட்டம் காய்கனி விளைச்சல், தோட்டக்கலை எந்தவிதமான ஏற்பாடுகளும் இல்லை. ஆதாரவிலை செய்து தருவோம் என்று சொன்னார்கள் இதுவரையில் இல்லை. மேற்பார் அணைத்திட்டம், வாரையார் அணை தூர்வார இரண்டுபக்கமும் கால்வாய் அமைப்போம் என்று சொன்னார்கள் இதுவரையில் இல்லை. ஆனால் தண்ணீர் வீணாக கடலுக்கு போய்க்கொண்டிருக்கிறது.
தென்பெண்ணையாற்றின் உபரி நீரை ஈச்சம்பாடி அணைக்கு கொண்டு செல்லும் வசதி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். ஆனால் இதுவரையில் இல்லை.

ஐந்து சட்டமன்றத் தொகுதிகளிலும் நமது தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப்பெற்றது. அதனால்தான் தருமபுரி மாவட்டத்திற்கு எதுவும் செய்யாமல் திமுக அரசு வஞ்சிக்கிறது.
திமுக தேர்தல் அறிக்கையில் சிப்காட் அமைப்போம் என்று கூறினார்கள். ஆனால் இதுவரையிலும் கொண்டுவரவில்லை. பேரிச்சம் பழத்திற்கு சிறப்பு நிதி தருவோம் என்றார்கள். இதுவரையிலும் செய்யவில்லை. பாப்பிரெட்டிப்பட்டியில் பாக்கிற்கு கொள்முதல் நிலையம் அமைப்போம் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரையில் அமைக்கவில்லை.
ஏரியூர், பென்னாகரம் வரை சாலை வசதிகள் அமைக்கப்படவில்லை. எல்லா இடங்களிலும் டோலியில் கட்டித் தூக்கி கொண்டு செல்கிறார்கள். அதே போன்று சட்டம் ஒழுங்கு எங்குமே கிடையாது.
இன்றைக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 60 சதவீதம் அதிகரித்துவிட்டது. 631 கொலைக் குற்றங்கள் நடந்திருக்கிறது. 18200 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு கோவையில் 19 வயது பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. அப்பெண் தப்பித்தோம், பிழைத்தோம் என்று உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. இதற்கு யார் காரணம்? தமிழக அரசின் காவல்துறை காரணம். யார் காவல்துறையை கையில் வைத்திருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின்தான் காவல்துறையை கையில் வைத்திருக்கிறார்.
இன்றைக்கு பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள துரைமுருகன் பேட்டி கொடுக்கிறார். ராஜராஜசோழனுக்கு பிறகு ராஜேந்திரசோழன் ஆட்சி செய்யவில்லை என்று கேட்கிறார். ஆனால் நான் கேட்கிறேன். அது மன்னராட்சி. இது மக்களாட்சி. ஒரு குடும்பம் வாழ வேண்டும் என்பதற்காக தனிமனிதன் சாக வேண்டுமா என்பதுதான் எங்களின் கேள்வி.
பேருந்து விடுகிறோம் என்று சொல்வார்கள். பின்னர் ஓசி பேருந்து என்று சொல்வார்கள். பெண்களை எவ்வளவு கேவலமாக திமுகவினர் பேசுகின்றனர். ஒரு அமைச்சர் நாமம் போட்டால் எப்படி? பட்டை அடித்தால் எப்படி என்று பெண்களை மிக கேவலமாக பேசுகிறார்.
தருமபுரி பகுதி மக்களுக்கு சிப்காட் அமைத்துக் கொடுத்தால் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதை செய்வோம் என்று 525 தேர்தல் வாக்குறுதியில் சொன்னார்கள். ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை.
சொத்துவரி உயர்வு முன்னூறு சதவீதம் அதிகரித்துள்ளது. மின்சாரக்கட்டணம் 100 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை உள்ள மின்கட்டணத்தை மாதம் ஒருமுறை கொண்டு வருவோம் என்றார்கள். ஆனால் இதுவரையில் இல்லை.
இப்பகுதி மக்கள் போர் வாட்டர் குடிப்பதால் கிட்னி குறைபாடு வருகிறது. ஆகவே அரசு மருத்துவமனையில் கிட்னி டயாலஸ் சிகிச்சை கொண்டு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.
ஈச்சம்பாடி அணையில் இருந்து தண்ணீர் ஏற்றி பொதிகை பள்ளம் கால்வாயிக்கு கொண்டு வந்தால் 40 ஏரிகளில் தண்ணீர் கிடைக்கும். ஒகேனக்கல்லில் தண்ணீர் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுகிறது. ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வருகிறது. ஆனால் இப்பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதில்லை.
மங்களூருவில் இருந்து சென்னைக்கு ரயில் போகிறது. மொரப்பூரில் போகும்போது நிற்கிறது. வரும்போது ரயில் நிற்கவில்லை என்று அதிமுக எம்.எல்.ஏ., கோவிந்தசாமி சொன்னார். ஒருமாத காலத்திற்குள் ரயில் நின்று செல்வதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று இந்த நேரத்தில் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமாக மரவள்ளிக்கிழங்கு விளைகிறது. அதற்கு தேவையான வேளாண் உதவிகள் செய்துதர வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம் செய்து தருவோம்.
மத்தியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழகத்தில் அண்ணன் எடப்பாடி பழனிசாமி இருவரும் சேர்ந்தால்தான் டபுள் இன்ஜின் சர்க்கார் செயல்படும். அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 40 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு பெற்றுத்தந்தார்கள். அதே மாதிரி வருகின்ற காலங்களிலும் மத்தியில் இருந்து நிதியை வாங்கித்தருவோம்.
இந்த பதினொரு ஆண்டுகளில் மட்டும் 16 லட்சம் கோடி ரூபாயை தமிழகத்திற்கு கொடுத்தது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.
தருமபுரி மாவட்டத்திற்கு மட்டும் 72 கிலோ மீட்டர் சாலையை 1331 கோடி ரூபாய் செலவில் இன்றைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தருமபுரி ரயில் நிலையம் 17 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. கிராம சாலைகளுக்கு மட்டும் 185 கிலோ மீட்டருக்கு 270 கோடி ரூபாய் செலவில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
11 ஆயிரத்து 630 மோடி வீடுகள் தருமபுரி மாவட்டத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் 68 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் 4 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கரும்புக்கு ஆதார்விலை வேண்டும். அதை நிச்சயமாக செய்து தருவோம்.
கரூரில் ஒரு சம்பவம் நடந்தது. பரிதாபமான காட்சி. மூன்று வயது குழந்தை, பத்து வயது குழந்தை என்று 41 பேர் உயிரிழந்தனர். சென்னையில் இருந்து முதலமைச்சர் உடனடியாக வருகிறார். அவ்வளவு அவசரம் என்ன என்று தெரியவில்லை. இந்த சம்பவம் நடந்ததற்கு யார் காரணம் என்று தெரியவில்லை. ஆனால் இன்றைக்கு சிபிஐ விசாரணை துவங்கியிருக்கிறது. நிச்சயமாக குற்றவாளிகள் கண்டுப்பிடிக்கப்படுவார்கள். தகுந்த தண்டனை கிடைக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
எல்லா இடங்களிலும் போதைப் பொருட்கள் கிடைப்பதால் பல குற்றங்கள் நடைபெறுகிறது. இதை தடுத்த நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் தேசிய ஜனநாயக கூட்டணி இன்றைக்கு உருவாகியிருக்கிறது. திமுக ஆட்சி விரட்டியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த கூட்டணி உருவாகியிருக்கிறது. மத்தியில் மோடி, தமிழ்நாட்டில் எடப்பாடி. இவ்வாறு நயினார் நாகேந்திரன் தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக, அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கானோர் எழுச்சியுடன் கலந்துக்கொண்டனர்.
மேலும் இது தொடர்பாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: எடுபடாது இனி மக்கள் மன்றத்திலே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சூழ்ச்சி..!
நொந்து நிற்கும் மக்களை மகிழ்விக்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வழியிலே, தமிழகதத்தில் அமையப்போகிறது நல்லாட்சி..!
நல்வாழ்விற்கும், வளர்ச்சிக்கும் ஏங்கி, எதிர்பார்த்து நிற்பவர்கள் மனம் குளிர ஏற்படப் போகிறது மலர்ச்சி..! ஆளும் தரப்பின் நாட்கள் எண்ணப்படுகிறது, 2026ல் ஆட்சி மாறப் போகிறது, அதற்கு இந்த தர்மபுரி மண்ணே சாட்சி..!
தன்மையான உள்ளம் கொண்ட தர்மபுரி மக்கள் மத்தியிலே, ‘‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’’, 16ம் நாள் இன்று.
இயற்கை எழிலோடும், குளுமையோடும் கண்களை கவரும் அழகோடும் காட்சியளிக்கும் ‘இந்தியாவின் நயகரா’ என அழைக்கப்படும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியை தனக்கென கொண்டிருக்கும் தர்மபுரியிலிருந்து அன்றாடம் அஞ்சவைக்கும், அவல ஆட்சியைக் கொடுத்து வரும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மீண்டும் சொல்லப்படும் செய்தி,
காயப்பட்டு, குமுறலோடு தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது வாக்காளப் பெருமக்களின் நெஞ்சங்கள்..!
காலம் கனியாது இனி, காத்திருப்பது வீண், விடை பெற்றுக் கொள்ள உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.!!
இன்றையக் கூட்டத்தில், தமிழ்நாடு பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி ராமலிங்கம், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், தர்மபுரி மாவட்ட பாஜக தலைவர் சரவணன், அதிமுக முன்னாள் அமைச்சரும் தர்மபுரி மாவட்ட கழக செயலாளருமான கே.பி.அன்பழகன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிந்தசாமி, வே.சம்பத்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் புகழேந்தி, அரவிந்தன், இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் ஜே.பி.நஞ்சப்பன், புதிய நீதிக் கட்சி வெங்கடேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

