மீண்டும் திமுக ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாட்டில் இனி யாரும் வாழவே முடியாத சூழல் உருவாகும் என ஈரோட்டில் ‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’ 11ஆம் நாள் நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் ‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’ பிரச்சாரத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் (நவம்பர் 03) கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது தொண்டர்கள் மத்தியில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:
கொங்கு நாட்டின் இதயமாக விளங்குகிற ஈரோட்டின் மண்ணில் பொதுக்கூட்டமா அல்லது மாநாடா, 2026 தேர்தலுக்கு பிறகு நடைபெறுகின்ற வெற்றி விழா பொதுக்கூட்டமா என்று கேள்வி கேட்கின்ற அவையில் ஈரோட்டிலே கூட்டிக்காட்டுகின்ற நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தின் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக இருக்கும் அண்ணன் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் மண்தான் இந்த ஈரோடு. காளிங்கராயன் கால்வாய் இன்றைக்கு சாக்கடை கால்வாயாக மாறியிருக்கிறது.
இந்தக் காலத்தில் திமுக ஆட்சியில் கேன்சரை ஈரோட்டு மாவட்டத்தில் பயிரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஈரோடு மாநகராட்சியை பொறுத்தமட்டில் தொழில்வரி ஏற்கனவே கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் டிரேட் வரி தனியாக போடுகிறார்கள். இந்த ஆட்சி இனி தொடர்ந்தால் தமிழ்நாட்டில் இனி யாரும் வாழவே முடியாத ஒரு மோசமான சூழ்நிலைக்கு போய்விடும்.
பெருந்துறை சிப்காட்டில் உள்ள கெமிக்கலால் 25 கிராமங்கள் பலியாயிருக்கிறது. ஆனால் இவரது (திமுக) ஆட்சியில்தான் சிவகிரி தோட்டத்தில் புகுந்து வயதான தம்பதிகளை வெட்டிக்கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கிறார்கள். தோட்டத்திற்கே போக முடியாத சூழ்நிலையை திமுக ஆட்சி உருவாக்கியுள்ளது.
தேர்தல் வாக்குறுதியில் சொன்ன பல்கலைக்கழகம் ஈரோடு மாவட்டத்திற்கு வந்திருக்கிறதா? வரவில்லை. பொல்லானுக்கு சிலை வைப்பதாக சொன்னார்கள், இதுவரை செய்யவில்லை.
ஈரோட்டில் விவசாய இயந்திர தொழிற்சாலைகள் அமைப்போம் என்றார்கள்? இதுவரை திமுகவினர் செய்யவில்லை. தொழிற்பூங்கா மற்றும் வர்த்தக மையம் அமைத்து தருவோம் என்றார்கள் இதுவரையில் இல்லை.
விசைத்தறி மற்றும் குடிசை தொழில்களுக்கும் மின்சார மானியத்தை கொடுப்போம் என்றார்கள், இதுவரையில் இல்லை.
இலவச வேட்டி, சேலை திட்டத்தில் நெசவுத் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 2500 ரூபாய் பொங்கலுக்கு கொடுத்தார். திமுக அரசாங்கம் கடந்த பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை.
இப்போ வருகிற பொங்கலுக்கு கொடுப்பார்கள். ஏன் கொடுப்பார்கள் என்றால் இனிமேல்தான் தேர்தல் வர உள்ளது.

ஆட்சி பொறுப்பேற்ற உடனே எல்லா மகளிருக்கு ஆயிரம் ரூபாய் தருவோம் என்று சொன்னார்கள். நாடாளுமன்றத் தேர்தல் வரும் வரைக்கும் கொடுக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் வந்த பிறகு கொடுத்தார்கள். ஆனால் உதயநிதி ஸ்டாலின் இப்போது என்ன சொல்கிறார் என்றால்? விடுப்பட்டவர்களுக்கு இனிமேல் நாங்க ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று கூறியிருக்கிறார்.
திமுக அரசு முடிகின்ற கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது. இன்னும் 135 நாட்கள் மட்டுமே திமுக அரசாங்கம் இருக்கும். அதன் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் நிச்சயமாக வரும்.
டாஸ்மாக்கில் அடுத்த ஆண்டு 48 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் செய்ய வேண்டும் என்பதற்காக இன்றைக்கு திமுக அரசு திட்டமிடுகிறார்கள். கஞ்சா, அபின், மெத்தபெட்டமைன் போன்ற போதைப்பொருட்கள் இன்றைக்கு விற்கப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை. இன்றைக்கு தமிழ்நாட்டில் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். கோயம்புத்தூரில் நேற்று இரவு ஆணும், பெண்ணும் சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மூன்று பேர் கஞ்சா போதையுடன் வருகிறார்கள். அந்த ஆணை தலையில் அரிவாளை வைத்து வெட்டிவிட்டு அப்பெண்ணை இழுத்துச்சென்று காலை 4 மணிவரை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
எவ்வளவு பெரிய அட்டூழியம், எவ்வளவு பெரிய அநியாயம். பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் மனது எவ்வளவு பதைபதைக்கும். காவல்துறை ரோந்து செல்லவில்லை. கோயம்புத்தூர் காவல்துறை என்ன செய்கிறது என்றே தெரியவில்லை. இதற்கு யார் காரணம், தமிழக முதலமைச்சர் காரணம். அவருக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை. துணை முதலமைச்சர் உதயநிதியை முதலமைச்சராக்க வேண்டும்.
2026 தேர்தல் வாக்குச்சாவடிக்கு போகிறதுக்கு முன்னாள் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உதயநிதியை முதலமைச்சர் ஆக்குவதற்கு ஓட்டு போடுகிறோமோ? இல்லை ஏற்கனவே நல்லாட்சி தந்த நாயகன் அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கு ஓட்டுப்போட வேண்டுமா? என்பதை சிந்தித்துப் பார்த்து வாக்களியுங்கள்.
இந்த திமுக ஆட்சியை நாம் அகற்றியே தீரவேண்டும். அதற்காக நாம் அனைவரும் சபதம் ஏற்க வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில்; ஈரோடு என்றதுமே நினைவுக்கு வருவது மஞ்சள். உணவின் சுவையை அதிகரிக்கச் செய்வதோடு மட்டுமே இந்த மஞ்சளின் பயன்பாடு முற்றுப் பெறுவதில்லை; மகத்தான மருத்துவ குணமும், சடங்கு சம்பரதாயங்களில் முக்கியத்துவம் பெறுவதாகவும் இருந்தும் வருகிறது இந்த மஞ்சள்.
இப்படி மகத்துவம் நிறைந்த மஞ்சளின் மகசூலை அதிகமாக செய்து கொடுக்கும் ஈரோட்டில் ‘‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’’ 11ம் நாள் இன்று.
இதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியாளர்களுக்கு தெரியப்படுத்தப்படுவது, மக்கள் மன்றத்திற்கான தேர்தல் விரைவில் உண்டு, அதில் இப்போது தமிழகத்தில் நடந்து வரும் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவை கண்டு, உலகே வியக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வழியிலே நின்று, மக்களுக்கான மகத்தான ஆட்சி விரைவில் மலரப் போகிறது என்று…
இன்றைய கூட்டத்தில் தமிழ்நாடு பாஜகவின், மாநில பொதுச்செயலாளர்கள் கருப்பு முருகானந்தம், ஏ.பி.முருகானந்தம், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் செந்தில், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சரஸ்வதி, அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தென்னரசு, சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

