ஜம்மு காஷ்மீர் பஹல்காமல் பள்ளத்தாக்கில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சென்னை பாஜக தலைமையகமான கமலாலயத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் அஞ்சலி செலுத்து நிகழ்ச்சி நடைபெற்றது.
காஷ்மீரில் (ஏப்ரல் 22) அன்று பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள். கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். இதில் ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்திய பின்னர் பேசிய தலைவர் நயினார் நாகேந்திரன்; உலகத்திலேயே எழில் மிகுந்த நகரம் என்று சுவிட்சர்லாந்தை சொல்வார்கள். அதனை காட்டிலும் எழில் மிகுந்த நகரம் காஷ்மீர். இங்கு 27 பேர் உயிரிழந்த சம்பவத்தை காட்டிலும் உலகெங்கும் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் மிகுந்த மனவேதனையை கொடுத்துள்ளது என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்.
டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் 370வது சட்டப்பிரிவு வேண்டாம் என்று சொல்லி வெளிநடப்பு செய்தார். அம்பேத்கர் இல்லாமலேயே 370வது பிரிவை கொண்டு வந்தது அன்றைய அரசாங்கம். அந்த சட்டம் நாட்டிற்கு மிகப்பெரிய துரோகம் என்று கூறியவர் அம்பேத்கர் அவர்கள். ஆனால் நமது உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் கடும் முயற்சிக்கு பிறகு 370வது பிரிவை நீக்கிய பின்னர் காஷ்மீர் பகுதிக்குள் அனைவரும் போகலாம், அனைவரும் இடங்களை வாங்கலாம், அனைவரும் தொழில் செய்யலாம் என இருந்து வருகிறது.
அப்பேற்பட்ட சூழ்நிலையில் இன்றைக்கு சுற்றுலா சென்றவர்களை இந்துக்கள் என்ற ஒரே காரணத்திற்காக, ஆண்களாக இருந்தால் அவர்களின் உடையை கழற்றி பார்த்துவிட்டு அவர்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றிருக்கிறார்கள். இந்த சம்பவம் உண்மையிலேயே நமக்கு எல்லாம் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இந்துக்கள் இந்துவாக பிறந்ததற்கு சுற்றுலா சென்று உயிரை பலிக்கொடுத்த ஒரு அவலமான நிலைமை நமக்கு எல்லாம் ஏற்பட்டுள்ளது. இதை இந்திய மக்கள் குறிப்பாக தமிழக மக்கள் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

இந்துவாக பிறந்ததற்கு உயிர் பலி கொடுக்க வேண்டுமா என்று எண்ணியே, இந்த நேரத்தில் இனிமேலாவது நாம் என்ன செய்ய வேண்டும் இந்த நாட்டிற்கு என்பதை சிந்தித்து சீர்தூக்கி பார்த்து நம்முடைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டு, நமது பாரதப் பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் எடுக்கும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சி முழுமையான ஒத்துழைப்பை அவர்களுக்கு கொடுக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொண்டு இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று இந்த நேரத்தில் அவர்களின் குடும்பத்தாருக்கும் தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். இதையும் சில பேர் அரசியலாக்கி கொண்டிருக்கிறார்கள். அதையும் எல்லாம் தமிழக மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று இந்த நேரத்தில் கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறோம். இவ்வாறு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மேலும், இது குறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: தேசியவாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை வேரறுப்போம் என்ற உறுதியுடன், பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலால் பலியான அப்பாவி பொதுமக்களுக்கு, நமது பாஜக சார்பாக அஞ்சலி செலுத்தினோம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.