மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய திமுக மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தருமபுரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் சரவணன் தலைமையில் எஸ்.பி., மகேஸ்வரனிடம் புகார் அளிக்கப்பட்டது.
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தர்மச்செல்வன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அப்பொறுப்பிற்கு வந்து மூன்று நாட்கள் கூட முடிவடையாத நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் எஸ்.பி.,க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். இதுப்பற்றிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இதற்கு தலைவர் அண்ணாமலை கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், நேற்று (பிப்ரவரி 28) திமுக மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரனிடம் பாஜக மாவட்டத் தலைவர் சரவணன் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட தலைவர் சரவணன் கூறியதாவது: தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் 26.02.2025 அன்று தருமபுரி நகரில் உள்ள அதியமான் அரங்கில் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் திமுக புதிய கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் பேசுகையில், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரசு அதிகாரிகள் நான் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்றும், நான் சொல்வதைக் கேட்காவிட்டால் இந்த மாவட்டத்தில் இருக்க மாட்டீர்கள் என்று அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். ஆகவே இவர் பேசிய பேச்சு அரசு அதிகாரிகளை மட்டுமின்றி பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தர்மசெல்வனை பாஜக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு சரவணன் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வின்போது பாஜக நிர்வாகிகள் சூர்யா, தினேஷ், சதாசிவம், கணேசன், சக்திவேல், வெங்கடேசன், பிரபாவதி விமலா, ஹரிஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.