கடந்த நான்கு ஆண்டுகளில், திமுக அரசு, கல்வித் துறைக்கு ஒதுக்கிய நிதி ரூ.1.5 லட்சம் கோடி. ஆனால், நமது குழந்தைகளுக்கு தரமான கல்வி இல்லை. அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் இல்லை. கழிப்பறை வசதி இல்லை. சுற்றுச்சுவர் இல்லை என கரூரில் நடந்த பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் தலைவர் அண்ணாமலை பேசினார்.
கரூர் மாவட்டத்தில் (பிப்ரவரி 19) நடைபெற்ற பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில், தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார்.
இதுதொடர்பாக தலைவர் அண்ணாமலை எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில், தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கி, பெரும் திரளெனக் குடியிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.
கடந்த பத்து ஆண்டுகளில், நமது நாடு வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் 19 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் இருந்து, தற்போது, 51 லட்சம் கோடி ரூபாயாக வளர்ந்துள்ளது. ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு வருமான வரி இல்லை என்பதில் இருந்து, ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வருமானம் வரை, வருமான வரி இல்லை என்பது, நடுத்தர மக்களுக்கு பெரும் சேமிப்பைக் கொடுக்கும்.
கடந்த 2004 – 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்துக்குக் கொடுத்த வரிப்பங்கீடு ரூ.1,52,000 கோடி. கடந்த 11 ஆண்டு கால பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான பாஜக ஆட்சியில், ரூ.6,14,000 கோடி நேரடி வரிப் பங்கீடு தமிழகத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுக, மத்திய அரசு நிதி தரவில்லை என்று பொய் கூறிக் கொண்டிருக்கிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில், திமுக அரசு, கல்வித் துறைக்கு ஒதுக்கிய நிதி ரூ.1.5 லட்சம் கோடி. ஆனால், நமது குழந்தைகளுக்கு தரமான கல்வி இல்லை. அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் இல்லை. கழிப்பறை வசதி இல்லை. சுற்றுச்சுவர் இல்லை. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்கள் வகுப்பறை இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து படிக்கின்றனர். எதற்கெடுத்தாலும் மத்திய அரசு நிதி தரவில்லை என்று சொல்லும் திமுகவினர், இந்த ரூ.1.5 லட்சம் கோடி பணம் எங்கே சென்றது என்று சொல்வார்களா?

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகன் உட்பட திமுகவினரின் குழந்தைகள் அனைவரும் தனியார் பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்கலாம். ஆனால், ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த நம்ம வீட்டுக் குழந்தைகளுக்கு, அரசுப் பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பு கிடைக்கக்கூடாதா? நமது பிரதமர் அவர்கள் ஹிந்தியைத் திணிக்கிறார் என்று பொய் கூறுகிறார்கள். காரணம், நம் வீட்டு குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைத்துவிட்டால், இவர்களுக்குப் போஸ்டர் ஒட்ட ஆள் கிடைக்காது என்பதால்.
பாஜக ஆளும் ஒவ்வொரு மாநிலங்களிலும், தாய்மார்களுக்கு ஒவ்வொரு மாதமும் நிதி வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக, டெல்லியில் ரூ.2,500 வழங்கப்படவிருக்கிறது. வரும் 2026 ஆம் ஆண்டு, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, நமது தாய்மார்கள் ஒவ்வொருவருக்கும், மாதம் தோறும் ரூ.2,500 க்கும் அதிகமாக வழங்கப்படும். இது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கேரண்டி.
கரூர் மாவட்டத் தலைவர் சகோதரர் செந்தில்நாதன் அவர்கள் தலைமையில், தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணன் கே.பி.ராமலிங்கம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சோழன் பழனிசாமி அவர்கள், மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தமிழக பாஜக சகோதர சகோதரிகள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.