அசாமில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும். இதன் மூலம் ஊடுருவல்காரர்கள் 4 முறை திருமணம் செய்து கொள்வது தடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அசாம் சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வரும் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அசாமின் கோல்பாரா மாவட்டம் துத்னோயில் பாஜக சார்பில் (ஏப்ரல் 03) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசியதாவது:
அசாமில் பழங்குடியினர் மேம்பாட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் ஒரு விரிவான செயல்திட்டத்தை தயாரித்துள்ளனர். இங்கு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் அதன் முழுமையான அமலாக்கம் சாத்தியமாகும். எனவே நீங்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில்தான் நமது நாடு தனது முதல் பழங்குடிப் பெண் குடியரசுத் தலைவரை பெற்றது. காங்கிரஸ் ஒருபோதும் ஒரு பழங்குடிப் பெண்ணை நாட்டின் குடியரசுத் தலைவராக்கியதில்லை. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அதை மாற்றினார். திரௌபதி முர்மு நாட்டின் முதல் குடிமகன் ஆனார்.
அசாமில் பொது சிவில் சட்டத்தை நாங்கள் கொண்டு வருவோம். இந்த சட்ட வரம்பில் இருந்து பழங்குடியினருக்கு விலக்கு அளிக்கப்படும். ஊடுருவல்காரர்கள் நான்கு முறை திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதை பொது சிவில் சட்டம் உறுதி செய்யும்.
அண்டை மாநிலமான மேகாலயாவில் சமீபத்தில் வன்முறை ஏற்பட்டது. ஊடுருவல்காரர்கள் பழங்குடிப் பெண்களை திருமணம் செய்து கொண்டு காரோ மலை தன்னாட்சி மாவட்ட கவுன்சிலில் அரசியல் செல்வாக்கு பெற முயன்றனர். இதுவே அங்கு மோதலுக்கு வழிவகுத்தது.
இங்கு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சட்டவிரோத ஊடுருவலை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கும். நாங்கள் அசாமில் அமைதியை கொண்டு வந்துள்ளோம். இங்கு காங்கிரஸ் சில இடங்களை வென்றால்கூட, மாநிலத்தில் மீண்டும் ஸ்திரமின்மை ஏற்படும். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.








