தருமபுரியில் கட்டுப்பாட்டை இழந்த காலாவதியான அரசுப் பேருந்து சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதியதில், அங்கு விளையாடிக்கொண்டிருந்த மூன்று வயது சிறுமி உயிரிழந்திருப்பது நெஞ்சை கனக்க வைக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் நூலஅள்ளி அடுத்த உழவன் கொட்டாய் கிராமத்திற்கு சென்றுவிட்டு (ஜூலை 23) காலை தருமபுரி நகரத்தை நோக்கி திரும்பிக்கொண்டிருந்த காலாவதியான அரசுப் பேருந்து ஸ்டேரிங் கட்டானதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ராமு என்பவரின் வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அப்போது வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த மூன்று வயது சிறுமி மற்றும் ஓட்டுநர் தேவராஜ் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிறுமி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தநிலையில், இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தருமபுரி மாவட்டம் உழவன் கொட்டாய் அருகே கட்டுப்பாட்டை இழந்த காலாவதியான அரசுப் பேருந்து சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதியதில், அங்கே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி பரிதாபமாக பலியானதாகவும் மேலும் 2 பேர் படுகாயமடைந்ததாகவும் வெளியாகியுள்ள செய்தி நெஞ்சை கனக்க வைக்கிறது. மகளை இழந்து வாடும் தாயாருக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மழை வந்தால் ஒழுகுவதும், காற்றடித்தால் உடைந்து பறப்பதும், வேகத்தடை மீது ஏறி இறங்கினால் படிக்கட்டுகள் கழன்று விழுவதும் தான் திமுக ஆட்சியில் அரசு பேருந்துகளின் அவல நிலை என்பதையும், இத்தகைய பேருந்துகள் பொது மக்களுக்கு பெரும் ஆபத்தானவை என்பதையும் நாம் பல முறை எடுத்துக் கூறியுள்ளோம். இப்படிப்பட்ட ஓட்டை உடைசல் பேருந்துகளை ஓட்டுநர்களால் எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? ஆளும் அரசு மக்கள் பாதுகாப்பைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தியதன் விளைவு தான் இன்று ஒரு பிஞ்சு உயிர் அநியாயமாகப் பறிபோயிருக்கிறது. ஆயிரம் ஆறுதல் சொன்னாலும் தனது மகளைப் பறிகொடுத்து வாடும் அந்த அன்னையின் இழப்பை ஈடு கட்ட முடியுமா?
எனவே, இந்தக் கோர விபத்திற்கு திறனற்ற திமுக அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும். ஓட்டுநரின் மீது பழியைப் போட்டு மக்களை மடைமாற்றுவதை விட்டுவிட்டு, உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு ரூ.20 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும் எனவும், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். இவ்வாறு ஏழை மக்களின் உயிரை துச்சமென நினைக்கும் அறிவாலயத்தின் ஆணவத்திற்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும்! இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.