---Advertisement---

பிரயாக்ராஜில் மகா மேளா தொடங்கியது: லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

On: January 3, 2026 9:12 AM
Follow Us:
---Advertisement---

பிரயாக்ராஜில் மகா மேளா இன்று (ஜனவரி 03) கோலாகலமாகத் தொடங்கியதையடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

வருடத்திற்கு ஒருமுறை நிகழும் மகா மேளா பிரயாக்ராஜில் இன்று தொடங்கியது. பௌஷ் பௌர்ணமி (பௌஷ் பூர்ணிமா) ஒரு மாதக் கால கல்பவாசம் இன்று முதல் தொடங்கியது. பிரயாக்ராஜில் இன்று புனித நீராடுவதால் மக்களின் பாவங்கள் நீங்குவதாக ஐதீகம்.

மகா மேளா நடைபெறும் இடத்தில் 10,000 சதுர அடி பரப்பளவில் பத்து நீராடும் படித்துறைகள், ஒன்பது மிதவைப் பாலங்களும் கட்டப்பட்டுள்ளன. கல்பவாசிகளும், பக்தர்களும் புனித நீராடுவதற்காக சிறப்பான ஏற்பாடுகளை உத்தர பிரதேச அரசு செய்துள்ளது.

கல்பவாசத்தின்போது பக்தர்கள் தினமும் இரண்டு முறை கங்கை நதியில் புனித நீராடுவார்கள். ஒருவேளை மட்டும் உணவு உண்டு, மீதி நேரத்தைத் தியானம் செய்வதிலும், தங்களின் இஷ்ட தெய்வத்தை வழிபடுவதிலும் செலவிடுவார்கள்.

இதுதொடர்பாக திரிவேணி சங்கம ஆரத்தி சேவா சமிதியின் தலைவர் ஆச்சார்யா ராஜேந்தி மிஸ்ரா கூறுகையில், மகா மேளா தொடங்கியுள்ள நிலையில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கல்பவாசத்தை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காலை 10 மணி வரை சுமார் 9 லட்சம் பக்தர்கள் பிரயாக்ராஜில் புனித நீராடியுள்ளனர். இன்று நாள் முழுவதும் புனித நீராடல் தொடரும் என்று அவர் கூறினார்.

பிரயாக் தாம் சங்கத்தின் தலைவர் ராஜேந்திர பாலிவால் கூறுகையில், கல்பவாசிகள் உள்பட சுமார் 20 லட்சம் பக்தர்கள் இன்று மாலைக்குள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

பௌஷ் பௌர்ணமியான இன்று புனித நீராடுவதற்கு மாலை 4 மணி வரை உகந்த நேரமாகக் கருதப்படுகிறது. கல்பவாசிகள், நீராடிய பிறகு, கல்பவாசத்திற்கான சபதத்தை எடுத்துக்கொண்டு, மேளா நடைபெறும் இடத்தில் தங்குவார்கள்.

பிரயாக்ராஜ் கோட்ட ஆணையர் சௌமியா அகர்வாலின் கூற்றுப்படி, பௌஷ் பௌர்ணமியான இன்று கங்கை மற்றும் திரிவேணி சங்கமத்தில் 20-30 லட்சம் பக்தர்கள் நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

புனித நீராடலின் முதல் நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் சற்று குறைவாக இருந்ததாகவும், பக்தர்கள் வசதியாக நீராட முடிந்ததாகவும் மகா மேளாவில் கலந்துகொண்டவர்கள் கூறியுள்ளனர்.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

இதையும் படிக்கலாமே !

Leave a Comment