மக்களின் முன்னேற்றம், நாட்டின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இது வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.
2026-27-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் (பிப்ரவரி 1) தாக்கல் செய்தார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்கது.
இந்த பட்ஜெட் இந்திய பெண்களின் வலிமையை எடுத்துரைக்கிறது. பெண் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் புதிய சாதனையை படைத்துள்ளார். அவர் தொடர்ச்சியாக 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். மக்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது. வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதற்கு வலுவான அஸ்திவாரமிடும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
திறமைவாய்ந்த இந்திய இளைஞர்களுக்கு புதிய கதவுகள் திறக்கப்பட்டு உள்ளன. மக்களின் முன்னேற்றம், நாட்டின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில் பட்ஜெட் அமைந்து உள்ளது. நிதிப் பற்றாக்குறையை குறைக்கவும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் பட்ஜெட்டில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.
140 கோடி இந்தியர்களின் கனவுகளை மத்திய பட்ஜெட் எதிரொலிக்கிறது. உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடு என்ற லட்சியத்தை விரைந்து எட்டிப்பிடிக்க விரும்புகிறோம். இதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த பட்ஜெட்டின் மூலம் உலகின் மிகப்பெரிய தரவு மையமாக இந்தியா உருவெடுக்கும். இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் மேலும் வலுவடையும்.
படைப்பாற்றல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய பட்ஜெட் தயார் செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும். இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சி மற்றும் வலுவான இந்தியாவை உருவாக்க ஏதுவாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.





