இந்திய கலாசாரத்திற்கு அடிப்படை, தமிழ் கலாசாரம். அதனால் பிரதமர் மோடி எங்கு சென்றாலும், தமிழ், தமிழர்களின் பெருமையை உயர்த்தி பேசுகிறார் என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை சார்பில், சென்னை கலைவாணர் அரங்கில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு (ஜனவரி 02) பாராட்டு விழா நடந்தது.
இந்த விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
இந்திய கலாசாரத்திற்கு அடிப்படை, தமிழ் கலாசாரம். அதனால் பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழ், தமிழர்களின் பெருமையை உயர்த்தி பேசுகிறார்.
‘உலகம் ஒன்று’ என, முதலில் சொன்னவர் கார்ல் மார்க்ஸ் அல்ல; அதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என, தமிழ் புலவர் கூறியதை, மோடி சொன்னார். அதன்பின்தான் தமிழர்களின் பெருமையை உலகம் அறிந்து கொண்டது.
மாநிலங்களுக்கு நன்மை நடக்க வேண்டு மானால், இந்தியா வலிமையான நாடாக இருக்க வேண்டும். இந்தியா வலிமை அடைவது, உலக நாடுகளை அச்சுறுத்துவதற்காக அல்ல.
இனியொரு முறை எந்த நாடும், இந்தியாவை அச்சுறுத்துவது குறித்து கனவில் கூட நினைக்கக் கூடாது என்பதற்காகவே.
நான் சிறுவனாக இருந்தபோது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் படேல் குறித்து படித்திருக்கிறேன்.
ஆர்.எஸ்.எஸ்.,சில் சேர்ந்த பின் அதன் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவாரின் தன்னலமற்ற உழைப்பையும், அவருக்கு இருந்த சமூகத்தின் மீதான அக்கறையையும், அப்பழுக்கற்ற தேசப் பக்தியையும் புரிந்து கொண்டேன்.
எந்த வழிபாட்டுக்கும், நாம் எதிராக இருந்தது இல்லை. மராட்டியர்கள் தமிழகத்தின் பல பகுதி களை கைப்பற்றினர். அதுபோல் ராஜேந்திர சோழன், வட மாநிலங்களில் பல பகுதிகளை கைப்பற்றினார். இதனால் இந்தோனேஷியா, கம்போடியா வரை ஆண்டார். அப்பகுதி மக்களின் உணர்வுகளை மதித்து போற்றினாரே தவிர, ஒருபோதும் மிதிக்க வில்லை.
தனது மதத்தை, இந்திய மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என அவுரங்கஷீப் சொன்னார். ஆனால் சத்ரபதி சிவாஜி, அவரவர் மதத்தை பின்பற்றட்டும்’ என்றார்.
இந்த சிந்தனை நம் மண்ணில் இருந்து வந்தது. ஆங்கிலேயர்கள் வந்த பின்தான், மதச்சார்பின்மை என்ற வார்த்தையே புரிந்தது போல் நினைக்கக் கூடாது.
ஆங்கிலேயர்கள் நம்மை பிளவுப் படுத்தினர். இப்போது அவர்கள், உலகம் முழுதும் இருந்து வருவோரை, வரவேற்பவர்களாக மாறியிருக்கின்றனர். இது காலம் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம். இவ்வாறு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இந்த விழாவில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், ஓய்வுபெற்ற நீதிபதிகள் வள்ளிநாயகம், ஜோதிமணி, வேல்ஸ் பல்கலை வேந்தர் ஐசரி கணேஷ், திரைப்பட இயக்குநர் பாக்யராஜ், தமிழக மருத்துவ பல்கலை முன்னாள் துணை வேந்தர் சுதா சேஷயன், இதய சிகிச்சை நிபுணர் சொக்கலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.




