முதலமைச்சர் ஸ்டாலின் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் என முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வேலூர் ஸ்ரீ நாராயணி பீடம் ஐம்பதாவது ஜெயந்தி விழா இன்று (ஜனவரி 02) கொண்டாடப்படுகிறது. இதற்காக வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி:
தமிழகத்தில் நான்கரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள கஞ்சா புழக்கத்திற்கு மத்திய அரசுதான் காரணம் என்கிறார்.
இப்படியெல்லாம் சொல்வதற்கு பதில், காவல் துறையை என்னால் நிர்வகிக்க முடியவில்லை என ஸ்டாலின் கூறிவிடலாம். தன் தோல்வியை முதல்வர் ஒப்புக் கொண்டால், கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த ஆலோசனை சொல்கிறேன்.
தமிழக காங்கிரசில் ராகுல் அணி, ஸ்டாலின் அணி என இரு அணிகள் உள்ளன. இரு கோஷ்டியினரும் மாறி மாறி ஜால்ரா போடுகின்றனர். தமிழக மக்களுக்காக சிந்திக்கக்கூட அவர்களுக்கு நேரம் இல்லை. காங்கிரஸ், விஜயோடு கூட்டணியாகச் சென்றால், சிதம்பரம் புதிய கட்சி ஆரம்பித்து திமுகவுடன் கூட்டணி வைப்பார் என சொல்கின்றனர்.
காங்கிரஸ் அழியும் கட்சி; அதற்கு தமிழக காங்கிரஸ் தலைவரே சான்று. வரும் சட்ட சபைத் தேர்தலுக்குப் பின், தமிழக காங்கிரசார் நடுத்தெருவில் நிற்பர். ‘சீட்’ கேட்பது மட்டுமல்ல பண பேரமும் நடக்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
‘முத்தலாக்’ விவகாரம் முறையிட்ட இஸ்லாமிய பெண் ஜலகண்டேஸ்வரர் கோவில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வெளியே வந்த அண்ணாமலையை, வேலூரை சேர்ந்த கதிஜா பேகம், தன்னுடைய சகோதரருடன் சந்தித்து, மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது : கடந்த 2010ல் முஹம்மது ரபிக் என்பவரை திருமணம் செய்து கொண்டேன். எனக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதை செய்தனர். இதுகுறித்து 8 ஆண்டுகளாக சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்; நடவடிக்கை இல்லை. எனது கணவரின் குடும்பத்தினர் கொணவட்டத்தில் உள்ள மசூதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று ‘முத்தலாக்’ சொன்னார்கள். ஏற்காததால் என்னையும் குழந்தைகளையும் கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்து வெற்று பேப்பரில் கையெழுத்து பெற்றனர். இதற்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




