---Advertisement---

சேவா தீர்த் கட்டிடம் 140 கோடி இந்தியர்களின் கனவு சின்னம் : பிரதமர் மோடி

On: February 14, 2026 3:11 PM
Follow Us:
---Advertisement---

பிரதமர் அலுவலகத்தின் புதிய கட்டடமான, ‘சேவா தீர்த்’ கட்டிடம் 140 கோடி இந்தியர்களின் கனவு சின்னம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பதவியேற்ற பிறகு பல்வேறு சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதன்படி டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டு 2023-ம் ஆண்டு மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

அதோடு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் இல்லம், பிரதமர் அலுவலகம், பல்வேறு அமைச்சகங்களின் அலுவலகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் ரூ.1,189 கோடி செலவில் பிரதமர் அலுவலகம் (சேவா தீர்த்) கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி (பிப்ரவரி 13) திறந்து வைத்தார். சுமார் 5 ஏக்கர் பரப்பில் புதிய பிரதமர் அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது. இதில் சேவா தீர்த் 1, சேவா தீர்த் 2, சேவா தீர்த் 3 என்ற பெயரில் 3 பிரதான கட்டிடங்கள் உள்ளன.

இதில் சேவா தீர்த் 1 கட்டிடத்தில் பிரதமர் அலுவலகம் செயல்படும் சேவா தீர்த் 2 கட்டிடத்தில் கேபினட் செயலாளர் அலுவலகம் செயல்படும். சேவா தீர்த் 3 கட்டிடத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் அலுவலகம் செயல்படும்.

மேலும் மத்திய அரசின் தலைமைச் செயலகத்தின் ஒரு பகுதியாக கர்த்தவ்ய பவன் 1, கர்த்தவ்ய பவன் 2 கட்டிடங்களையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இவற்றில் நிதியமைச்சகம், பாதுகாப்புத் துறை, சுகாதாரத் துறை, கார்ப்பரேட் விவகாரம், கல்வி, கலாச்சாரம், சட்டத்துறை, தகவல்- ஒலிபரப்புத்துறை, வேளாண் துறை, ரசாயனத்துறை, பழங்குடியினர் நலத்துறை ஆகியவை செயல்படும்.

புதிய பிரதமர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலையில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இன்று நாம் அனைவரும் வரலாறு உருவாகி வருவதைக் காண்கிறோம். இந்த நாள் பிப்ரவரி 13 இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது. வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய உறுதியுடன் புதிய பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைகிறேன். நமது இலக்கில் வெற்றி பெற நமக்கு தெய்வீக ஆசீர்வாதங்கள் உள்ளன.

சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலக கட்டடங்கள் முதலில் பிரிட்டிஷ் பேரரசின் அடையாளங்களாகக் கட்டப்பட்டன என்பதை நினைவில் கொள்வது அவசியம். அவற்றின் கட்டுமானத்தின் பின்னணியில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை வலுப்படுத்துவதும், இந்தியாவை பல தலைமுறைகளாக அடிமை நிலையில் வைத்திருப்பதும் நோக்கமாகும். தற்போது கட்டடங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.

மக்கள் விருப்பம். புதிய பிரதமர் அலுவலக கட்டடங்கள் இந்திய மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக கட்டப்பட்டுள்ளன. இங்கு எடுக்கப்படும் முடிவுகள் ஒரு மகா ராஜாவின் தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிக்காது, மாறாக 140 கோடி நாட்டு மக்களின் விருப்பங்களை முன்னேற்றுவதற்கான அடிப்படையை உருவாக்கும். இந்த உணர்வோடு, இன்று நான் இந்த சேவா தீர்த்தம் மற்றும் கர்தவ்ய பவனை இந்திய மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.

21ஆம் நூற்றாண்டின் முதல் காலாண்டு இப்போது நிறைவடைந்துள்ளது. வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வை கொள்கைகள் மற்றும் திட்டங்களில் மட்டுமல்ல, நமது பணியிடங்கள் மற்றும் கட்டடங்களிலும் பிரதிபலிக்க வேண்டியது அவசியம். நாடு நிர்வகிக்கப்படும் இடம் பயனுள்ளதாகவும் ஊக்கமளிப்பதாகவும் இருக்க வேண்டும்.

நேரம் மிச்சம். உதாரணமாக, சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், டெல்லி அரசின் பல அமைச்சகங்கள் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து இயங்கி வருகின்றன. இந்த இடங்களுக்கான வாடகைக்கு ஆண்டுதோறும் 1,500 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்படுகிறது. ஒவ்வொரு நாளும், எட்டு முதல் பத்து ஆயிரம் ஊழியர்களை ஒரு கட்டடத்திலிருந்து மற்றொரு கட்டடத்திற்கு மாற்றுவதற்கு தனித்தனி செலவுகள் இருந்தன. இப்பொழுது சேவா தீர்த் மற்றும் கர்தவ்யா கட்டடங்கள் கட்டப்படுள்ளதால், இந்த செலவுகள் குறைக்கப்படும். நேரம் மிச்சமாகும்.

வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய, அடிமைத்தன மனநிலையிலிருந்து வெளியேறி முன்னேற்ற பாதையில் செல்வது மிகவும் முக்கியமாகும். துரதிர்ஷ்டவசமாக, சுதந்திரத்திற்குப் பிறகும், அடிமைத்தனத்தின் சின்னங்கள் நம் நாட்டில் இருந்துள்ளன. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்த நிகழ்வில், ஒரு நினைவு அஞ்சல் தலை மற்றும் நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

புதிதாக திறக்கப்பட்ட பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது அன்றாட அலுவல்களை தொடங்கினார். குறிப்பாக லட்சாதிபதி சகோதரிகள், வேளாண்மை உள்கட்டமைப்பு நிதி, ஸ்டார்ட் அப் நிதியம் 2 .0 திட்டம் தொடர்பான கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார். இதில் ஸ்டார்ட் அப் நிதியம் 2.0 திட்டத்துக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

லட்சாதிபதி சகோதரிகள் திட்டத்தின் கீழ் மகளிர் சுயநிதி குழுக்களை சேர்ந்த 1.48 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக உருவாக்கப்பட்டு உள்ளனர். வரும் 2027-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த எண்ணிக்கையை 3 கோடியாகவும் வரும் 2029 மார்ச் மாதத்தில் 6 கோடியாகவும் உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுதொடர்பான கோப்பில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டார்.

வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியம் திட்டத்தின் கீழ் விவசாயிகள் மற்றும் வேளாண்மை சங்கங்களுக்கு 3 சதவீத வட்டியில் கடன் உதவி வழங்கப்படுகிறது.
வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியம் தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படுகிறது. இந்த நிதியத்தின் முதலீட்டு தொகை ரூ.2 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதற்கான கோப்பில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டார்.

சாலை விபத்தில் சிக்கும் நபர்களுக்கு 7 நாட்கள் ரூ.1.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான கோப்பில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டார்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment